தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிடச் சென்ற அவர்களது உறவினர்களான பெண்களை மிகவும் மோசமாக சோதனை செய்து அவர்களை அசிங்கப்படுத்தியதுடன், இன வாதமாகவும் சிறைச்சாலை அதிகாரிகள் நடந்து கொண்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி.யான செல்வம் அடைக்கலநாதன் குற்றம் சாட்டியுள்ளார்.
வவுனியாவில் உள்ள தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு குற்றம்சாட்டிய அவர் மேலும் கூறுகையில், கைதிகள் தினத்தை முன்னிட்டு தங்களது உறவுகளை சிறைச்சாலைகளில் பார்வையிடச் சென்ற சொந்தங்கள் மிக மோசமான முறையில் சோதனை செய்யப்பட்டுள்ளார்கள். பெண்கள் மிகவும் வன்மமான முறையில் சோதிக்கப்பட்டுள்ளார்கள். அசிங்கமான வார்த்தைகளை பிரயோகித்துள்ளார்கள். சிறைச்சாலையில் உள்ள தேவதாசன் என்பவரை பார்க்கச் சென்ற அவரது மகளை மிக மோசமாக பரிசோதனை செய்த நிலையில் அந்த சகோதரி அதற்கு எதிர்ப்பை காட்டிய போது அவர்கள் சிங்களத்தில் இது எங்களது சிங்கள நாடு எனக் கூறியுள்ளார்கள். மிகவும் இனவாதத்தோடு இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கும் கடிதம் மூலம் தெரியப்படுத்தவுள்ளோம் என்றார்.