தாய்லாந்தில் மன்னர்ஆட்சி முறைக்கு எதிராக குரல் கொடுத்துவந்த இளைஞர்களுக்கு அந்நாட்டின் பாராளுமன்றத் தேர்தல்களில் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது, தாய்லாந்தில் பல ஆண்டுகளாக மன்னர் ஆட்சி முறை வழக்கத்தில் உள்ளது.
தற்போது தாய்லாந்து மன்னராக வஜ்ரலாங்கோர்ன் உள்ளார். தாய்லாந்து மன்னராக இருந்த பூமிபோல் அதுல்யதேஜ் கடந்த 2016 ஆம் ஆண்டு உயிரிழந்தார். இவரைத் தொடர்ந்து, அவரின் மகனாக வஜ்ரலாங்கோர்ன் மன்னராவதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. இருப்பினும் அவர் மன்னரானார். இந்த நிலையில் தான் 2019 இல் வஜ்ரலாங்கோர்ன் தனது காதலிகளுடன் வலம் வரும் புகைப் படங்கள் வெளியாகி தாய்லாந்தில்சர்ச்சையை ஏற்படுத்தியது.
மேலும் நான்காவது மனைவியாக தனது பாதுகாவலரை வஜ்ரலாங்கோர்ள் மணந்து கொண்டது அவரை மேலும் விமர்சனத்துக்குள்ளாக்கியது. பதவி மற்றும் செல்வத்தை மட்டுமே வஜ்ரலாங்கோர்ன் விரும்புகிறார். மக்களின் நலனில் அவருக்கு அக்கறை இல்லை எனவும் விமர்சிக்கப்பட்டது. இது தொடர்பாகவே மாணவ அமைப்பினர் 2020 இல் மன்னர் ஆட்சிக்கு எதிராகவும் இராணுவத்துக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தவர்களில் முக்கியமானவர் சோந்திச்சா ஜாங்க்ரூ. மன்னருக்கு எதிராக போராடியதற்கு சோந்திச்சாவுக்கு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.
தற்போது சோந்திச்சா தாய்லாந்தின் முன்னேற்ற கட்சி சார்பாக மே மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட இருக்கிறார். இவருடன் மன்னர் ஆட்சிக்கு எதிராக போராடிய இன்னும் சிலரும் பாராளுமன்றத் தேர்தலை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள உள்ளனர். இந்தத் தேர்தலுக்காக சோந்திச்சா வீதி வீதியாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். மன்னாராட்சிக்கு எதிராக போராடி தற்போது தேர்தலை எதிர்கொண்டுள்ள மாணவர்களுக்கு வெற்றி வாய்ப்பு, மக்களிடம் அதிகரித்திருப்பதாக ஊடகங்களும் கணித்து செய்தி வெளியிட்டுள்ளன. தாய்லாந்தின் மன்னர் மற்றும் இராணுவ ஆட்சி வரலாற்றில் இந்த மாணவ இயக்கங்கள் புதிய நம்பிக்கை விதையை மக்கள் மனதில் விதைத்து வருகின்றன.