முல்லைத்தீவு, மூங்கிலாறு வடக்கில் நேற்றுமுன்தினம் சடலமாக மீட்கப்பட்ட சிறுமியின் உயிரிழப்புக்கு பிறப்புறுப்பில் ஏற்பட்ட காயமே காரணம் என்பது உடற்கூற்றுப் பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடையார்கட்டு வடக்கு, மூங்கிலாறில் 200 வீட்டுத் திட்டத்தில் வசிக்கும் யோ. நிதர்சனா என்ற 12 வயதுச் சிறுமி கடந்த 15ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்தார். அது தொடர்பில் சிறுமியின் தாய் புதுக்குடியிருப்புப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
அதன்பின்னர் கிராம மக்கள், பொலிஸார், இராணுவத்தினர் இணைந்து அந்தப் பகுதியில் தேடுதல் நடத்தப்பட்டபோதும் சிறுமி கண்டுபிடிக்கப்படவில்லை . இந்த நிலையில் நேற்றுமுன்தினம் வீட்டிலிருந்து சுமார் 300 மீற்றர் தூரத்தில் உள்ள பற்றைக்காணிக்குள் இருந்து சிறுமியின் உடல், ஆடைகள் கலைந்த நிலையில் மீட்கப்பட்டது. சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சடலத்தை மீட்டு உடற்கூற்றுப் பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் ஒப்படைத்தனர். உடற்கூற்றுப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், சிறுமியின் பிறப்புறுப்பில் ஏற்பட்ட காயமே உயிரிழப்புக்குக் காரணம் என்று தெரிவிக்கப்படுகின்றது. சிறுமி திருகோணமலையில் விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்ற நிலையில் கடந்த ஜூலை மாதமே மூங்கிலாறு வந்திருந்தார். அதன்பின்னர் அவர் வீட்டில் தங்கியிருந்தார் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் சிறுமியின் குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று பொலிஸார் தெரிவித்தனர்.