தென்மேற்கு வங்காள விரிகுடாவில் உருவான தாழமுக்கம் இலங்கையின் கிழக்கு கடற்கரை வழியாக இலங்கைக்குள் நுழைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த தாழமுக்க நிலை நாட்டை ஊடறுத்து செல்லவுள்ள நிலையில், எதிர்வரும் மணித்தியாலங்களில் நாட்டின் பல பாகங்களில் கடும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. எனவே, கடலுக்குச் செல்லும் போது கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கடந்த சில மணித்தியாலங்களாக பெய்துவரும் பலத்த மழை காரணமாக கண்டி தொடரூந்து நிலையம் முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் தொடரூந்து சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. நேற்று (24) தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்பட்ட தாழமுக்கமானது, கடந்த 06 மணித்தியாலத்தில் மணிக்கு 8 கிலோமீற்றர் வேகத்தில் தென்மேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை 05.30 மணிக்கு திருகோணமலையிலிருந்து வட கிழக்காக 110km தூரத்தில் வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்பட்டது.
இது இன்று தென்மேற்கு கிழக்கு கடற்கரை ஊடாக இலங்கையினுள் நுழைந்துள்ளது. இந்த தாழக்கம் இலங்கையை ஊடறுத்து நாளை காலை கன்னியாகுமரியின் கொமோரின் பிரதேசத்தை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்தர்ப்பத்தில் காற்றின் வேகமானது மணிக்கு 45 முதல் 55 வரை காணப்படுவதுடன் (காற்றின் வேகமானது 65 கிலோமீற்றர் வரை அதிகரிக்க கூடும்) கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாக காணப்படுவதுடன் நாளை மறுதினம் முதல் கடலின் கொந்தளிப்பு படிப்படியாக குறைவடையும்.
இதேவேளை, வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று காலை 05.30 க்கு வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பில் கிழக்கு, ஊவா, மத்திய, சப்ரகமுவ, மேற்கு, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் கனத்த மழை பெய்யும் எனவும், சில பிரதேசங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது. அத்துடன் மீனவர் சமூகம் மற்றும் கடல் சார் தொழிலாளர்கள் காலி முதல் கொழும்பு, புத்தளம், மன்னார், காங்கேசன்துறை, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடற் பிராந்தியங்களிலும் தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியங்களிலும் மறு அறிவித்தல் வரை கடற்றொழில் மற்றும் பயணங்களில் ஈடுபட வேண்டாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.