அனைத்துக் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளையும் ஒரே மேடைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இதனூடாக அரசாங்கத்தின் தேர்தல் ஒத்திவைப்பு முயற்சிகள் தோற்கடிக்கப்படும் என்றும் அரசாங்கத்தில் இருந்து விலகி எதிர்க்கட்சியில் சுயாதீனமாக இயங்கும் டலஸ் அழகப்பெரும் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் நேற்று புதன்கிழமை தேர்தல்கள் ஆணைக் குழு அதிகாரிகளை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது டலஸ் அழகப்பெரும மேலும் தெரிவிக்கையில், நாட்டின் அனைத்துக் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளையும் ஒரே மேடைக்கு கொண்டு வரும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நீதிமன்றம், பாராளுமன்றம் உள்ளிட்ட அனைத்து இடங்கள் மூலமும் அரசாங்கத்தின் இந்த முயற்சிகள் தோற்கடிக்கப்படும். 4 தேர்தல் அட்டவணையை நீக்குவதாக 1977 ஆம் ஆண்டில் பொதுத் தேர்தலின் போது அரச தலைவர் கூறியிருந்தார்.
அப்போது அரசாங்கத்தில் தற்போதைய ஜனாதிபதி உறுப்பினராக இருந்தார். வாக்களிப்பு நிலையங்களுக்கு வந்து பலவந்தமாக வாக்களித்து தேர்தல் வரைபுகளை சீர்குலைத்த வரலாறுகளும் உள்ளன. இந்நிலையில் புதிய வழியில் அதனை இப்போது செய்வதற்கு முயற்சிக்கின்றனர். அதனை அனைவரும் ஒன்றிணைந்து தோற்கடிக்க வேண்டும். தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரங்கள் உள்ளன. அவர்கள் மீது நாங்கள் நம்பிக்கை வைப்போம் என்றார்.