2023 உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு ஆதரவளிக்கத் தவறிய அரச அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் கண்காணிப்பு அமைப்பு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இவ்வாறான அரசியலமைப்பு பணிகளுக்கு ஆதரவளிக்க எதிர்பார்த்த அரச அதிகாரிகள் பல்வேறு காரணங்களை கூறி இடையூறு செய்வதை தொடர்ச்சியாக அவதானித்து வருவதாக பெஃப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். தேர்தல் நடத்தப்படும் போது, நிதி அமைச்சு, பொலிஸ், அரச அச்சகம், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், பொது நிர்வாக அமைச்சு உட்பட அனைத்து அரச நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளின் ஆதரவு அத்தியாவசியமான காரணிகளாகும்.
எவ்வாறாயினும், துரதிஷ்டவசமாக மேற்குறிப்பிட்ட தரப்பினர் இணங்காத காரணத்தினால் தேர்தல் நடவடிக்கைகள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளமையே அவர்கள் அவதானித்ததாக ஹெட்டியாராச்சி தெரிவித்தார். இத்தகைய சூழல் ஜனநாயக நடைமுறைகளின் அடிப்படையில் தீங்கானது என்றும் எதிர்கால தேர்தல்களுக்கு மோசமான முன்னுதாரணமாக அமையும் என்றும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைவாக, தமது பணிகளை நிறைவேற்றத் தவறிய உத்தியோகத்தர்களுக்கு எதிராக அரசியலமைப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அமைப்புக்கு அறிவிக்குமாறு ரோஹன ஹெட்டியாராச்சி தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.