சர்வதேசத்திற்கு சென்றாவது தேர்தல் உரிமைகளை வென்றெடுப்பதற்கு நடவடிக்கை எடுப்போம் என்று ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று வியாழக்கிழமை ஐக்கிய மக்கள் சக்தியினால் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அந்தக் கட்சியின் பொதுச் செயலாளளர் ரஞ்சித் மத்தும பண்டாரவே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மக்கள் இந்த அரசாங்கத்தை நிராகரித்துள்ளனர். 2020 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணை அரசாங்கத்திற்கு இப்போது கிடையாது. இதனால்தான் தேர்தலை நடத்துமாறு கோரிக்கைகள் விடுக்கப்படுகின்றன. ஆனால் தேர்தலை ஒத்திவைப்பதற்கே முயற்சிக்கப்படுகின்றது. இந் நிலையில் தேர்தலை நடத்துவதற்காக முன்னெடுக்க வேண்டிய அனைத்து முயற்சிகளையும் நாங்கள் முன்னெடுப்போம்.
எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து குறித்த தினத்தில் தேர்தலை நடத்தாவிட்டால் எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதற்காக தீர்மானங்களை எடுத்துள்ளோம். பாராளுமன்றத்திற்கு உள்ளேயும், பாராளுமன்றத்திற்கு வெளியிலும் மற்றும் நீதிமன்றத்தின் ஊடாகவும் மற்றும் சர்வதேசத்திற்கு சென்றும் தேர்தல் உரிமைகளை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்க தீர்மனிக்கப்பட்டுள்ளது.
இதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தலைமைத்துவத்தை வழங்கவும், அதனை வழிநடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக அனைவரையும் ஒரே மேடைக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோன்று தயவு செய்து மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.