தேசிய கொள்கைக்கான தொழில் வல்லுநர்களின் கூட்டமைப்பு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழில் வல்லுநர்கள் மற்றும் இளைஞர்கள் குழு, தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலைமையை தீர்ப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் அடங்கிய சுருக்கமான ஆலோசனைகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவிடம் சமர்ப்பித்துள்ளனர்.
இந்த முன்மொழிவுகள் இன்று (01) முற்பகல், கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் வைத்து கையளிக்கப்பட்டது. தற்போதைய அரசியல், சமூக மற்றும் பொருளாதார நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கான குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால நடவடிக்கைகள் மற்றும் மக்களுக்கு நட்பான புதிய அரசியலமைப்பொன்றை நிறைவேற்றிக் கொள்வது பற்றி இங்கு கலந்துரையாடப்பட்டது.
11 அடிப்படை விடயங்களைக் கொண்ட பிரேரணையை ஆராய்ந்த பின்னர், அடுத்த சில நாட்களுக்குள் அடுத்த கலந்துரையாடலை நடத்துவதற்கு இணக்கம் காணப்பட்டது. நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு பல்வேறு துறைகளில் நிபுணர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பல குழுக்கள் தயாராக இருப்பதாகவும், அந்த குழுக்களின் சாதகமான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான அதிகாரங்களையும் மற்றும் வளங்களையும் பெற்றுக் கொடுப்பதற்கு தான் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
குறிப்பிட்ட இலக்குகளுடன் கூடிய அபிவிருத்தி வேலைத்திட்டம் வருடாந்தம் அனைத்து அமைச்சுக்களுக்கும் வழங்கப்பட வேண்டுமெனவும், காலாண்டுக்கு ஒருமுறை அந்த இலக்குகளின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் நிபுணர்கள் சுட்டிக்காட்டினர். இந்த ஆண்டு இறுதிக்குள் இலக்குகளை அடையத் தவறிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை அப்பதவிகளில் இருந்து நீக்குவதன் அவசியமும் இம்முன்மொழிவில் உள்ளடக்கப்பட்டிருந்தது.
பேராசிரியர் வண. பாத்தேகம ஞானிஸ்ஸர, சாஸ்திரபதி வண. வித்தியல கவிதஜ தேரர்கள் மற்றும் தேசிய கொள்கைக்கான தொழிற்சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வைத்தியர் அசோக ஜயசேன, சட்டத்தரணி நெலும் வேரகொட ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு போராட்டத்தில் தொடர்புடைய தொழில் வல்லுனர்கள் மற்றும் இளைஞர் குழு ஒன்றும் இதில் கலந்துகொண்டனர். அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி அனுர திஸாநாயக்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.