போருக்கு மத்தியில் ரஷ்யா- உக்ரைன் பேச்சுவார்த்தை 2ம் கட்ட நகர்வு

போர் நிறுத்தம் தொடர்பில் ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையில் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தை தற்போது நிறைவடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டிருந்த இரு நாட்டு பிரதிநிதிகளும் தங்களது நாடுகளுக்கு திரும்பியுள்ளதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. இந்த பேச்சு வார்த்தை பெலாரஸ் (Belarus)  நாட்டின் எல்லையில் உள்ள கோமல் நகரில் இடம் பெற்றிருந்தது. இதன் போது ரஷ்யா உடனடியாக போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும். ரஷ்ய படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்று உக்ரைன் வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், அடுத்த சுற்றுக்கு முன்னதாக ஆலோசனைக்காகத் திரும்புவதாகவும் இரு நாட்டு பிரதிநிதிகளும் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தொடர்ந்து 5ஆவது நாளாக தாக்குதல் நடத்திவருகின்றன.

தலைநகர் கீவை கைப்பற்றும் நோக்கில் ரஷ்ய படைகள் உக்கிரமான தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு உக்ரைன் தரப்பில் கடும் பதிலடி கொடுக்கப்படுகிறது. இந்த சண்டையில் இரு தரப்பிலும் பெருமளவில் உயிரிழப்பு மற்றும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. போர் தொடங்கியதில் இருந்து இது வரை உக்ரைன் நடத்திய பதில் தாக்குதல்களில் 5300க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் இராணும் அறிவித்துள்ளது.

ரஷ்ய இராணுவத்தின் 191 பீரங்கிகள், 29 போர் விமானங்கள், 29 ஹெலிகொப்டர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் கூறி உள்ளது. இதுதவிர 816 கவச வாகனங்கள் வீழ்த்தப்பட்டுள்ளன. மேலும், ரஷ்ய வீரர்கள் சிலரை போர்க்கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாகவும் உக்ரைன் இராணுவம் கூறியுள்ளது. உக்ரைனில் உள்ள ரஷ்ய வீரர்கள் உடனே வெளியேற வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவுறுத்தியதுடன், உயிரை காப்பாற்றிக் கொள்ளுங்கள் என எச்சரித்துள்ளார். தொலைக்காட்சியில் உரையாற்றிய அதிபர் ஜெலன்ஸ்கி , ரஷ்யாவுக்கு எதிரான போரில் சண்டையிட விரும்பினால் இராணுவ அனுபவம் உள்ள கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் . ஐரோப்பிய ஒன்றியம் தங்கள் நாட்டை  உறுப்பினராக சேர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Spread the love