மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 22 பெருந்தோட்டக் கம்பனிகள் ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்கி வருகின்றன, ஆனால் ஆறு கம்பனிகள் மட்டுமே உடன்பாடின்றி இழுத்தடிப்பு செய்கின்றன, என்றும் இப்பிரச்சினைக்கு மிக விரைவில் உரிய பொறிமுறை உருவாக்கப்படும் என்றும்,
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான், தெரிவித்தார். தலவாக்கலையில் நேற்று (23/02/2022) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது ஊடகவியலாளர்களோடு தனது கருத்து பகிர்வின்போது அவர் இக்கூற்றைக் கூறி நின்றார்.
மேலும் கருத்துக்கூறுகையில் , தானும், பாராளுமன்ற உறுப்பினர் ரமேஷ் மற்றும் உடன் கூடச்சென்ற உப தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோர் தமிழகம் சென்றிருந்தபோது தமிழக முதல்வரை தொடர்புகொண்ட சந்தர்ப்பத்தில் அவருடன் பல விடயங்களை தொடர்பில் கலந்துரையாடியதாகவும்
குறிப்பாக மலையக மாணவர்களுக்கு தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் 100 புலமைப்பரிசில்களை வழங்குமாறு கோரிக்கை விடுத்ததாகவும் அவர் தனது ஊடக சந்திப்பில் கருத்துப்பரிமாறினார். அண்மையில் தமிழகத்தில் நடைபெற்று முடிந்த தமிழர் மாநாட்டுக்கு இந்திய வம்சாவளி மக்களாகிய தங்களுக்கு அழைப்பு விடுக்கப்படாதது பற்றியும் அதில் தற்போதைய எம்பிக்களாக 10 பேரும் மற்றும் முன்னாள் எம்.பிக்கள் பலரும் உள்ளனர் என்பது பற்றியும் பேச முடிந்ததாகவும் குறிப்பாக தற்சமயம் நடப்பில் காணப்படும் எல்லைதாண்டிய மீனவர் பிரச்சினை சம்பந்தமாகவும் செந்தில் தொண்டமானாகிய தான் கருத்துகளை முன்வைத்திருந்தார் என்றும் தெரிவித்திருந்தார்.
மேலும் கட்சிகளைச்சாடுகின்ற வேளை, எமது மக்களுக்காக நாம் எமது கட்சி சார்பில் எதை செய்தாலும் அதை சிலர் வெளியில் நின்று விமர்சிக்கின்றனர். மக்களது கோரிக்கையாக “கோதுமை மா நிவாரணம் வேண்டும்” என்றனர். அதை பெற்றுக்கொடுத்தோம், ஆனால் நாமே மீண்டும் விமர்சனத்துக்கு உள்ளானோம் . காங்கிரஸை நோக்கி ஒரு விரல் நீட்டும்போது எஞ்சிய நான்கு விரல்களும் அவர்கள் பக்கம்தான் உள்ளன என்பதை மறந்துவிடுகின்றனர் அவர்கள் என்று சுட்டிக்காட்டினார்.
நாம் எமது வாழ்நாளில் மக்களுக்கு சேவையாற்றவே வந்தோம். எனவே உங்களிடம் நாம் கேட்பது ஒன்றே “முடியுமானால் எமக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள். இல்லையேல் ஒதுங்கி நின்று பார்த்து வழிவிடுங்கள்” . நல்லாட்சி அரசாங்க ஆட்சியின்போது தேயிலைச் சபை ஊடாக 50 ரூபாயைத்தானும் பெற்றுக் கொடுக்க முடியாதவர்கள் இன்று எமது முயற்சியை சாடுகின்றனர் என்றார்.