தற்போது நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு மத்தியில், தோட்ட மக்களின் நிலைமைகளையும் அரசாங்கம் கவனத்தில் கொண்டுள்ளது.
இவர்களுக்கு தேவையான அத்தியாவசிய் போருட்களை கூட்டுறவுச்சங்கங்கள் ஊடாக விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
தற்போதைய எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காண ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ரஷ்ய ஜனாதிபதியுடன் தொலைபேசியில் கலந்துரையாடி ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதனால், தூதுவர்கள் ஊடாக தேவையான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளார். ரஷ்ய ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றையும் சமர்ப்பித்து எரிபொருளைப் பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே சுட்டிக்காட்டினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் (28) நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட அவர் இவ்வாறு கூறினார்.
இலங்கைக்கான எரிபொருள் விநியோகம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதி ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.இந்தியாவில் இருந்து எரிபொருளை விரைவாக பெற்றுக்கொள்வது தொடர்பாக ஜனாதிபதி, பெற்றோலியத்துறை அமைச்சர், வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் இந்திய பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்
அடுத்த இரண்டு வாரங்களுக்குள் சர்வதேச நாணய நிதியத்துடன் பிரதமர் கலந்துரையாடி புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவார் என்று குறிப்பிட்ட அவர் ,இலங்கை தற்போது கடுமையான நிதி நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. இந்த நெருக்கடி காரணமாக நாட்டில் கடுமையான சமூக எதிர்ப்புக்கள் எழுந்துள்ளன. இதற்காக ஆறு பிரதான விடயங்கள் அடையாளங்காணப்பட்டுள்ளன..
அண்மைக்காலத்தில் மக்களைப் பாதித்த முக்கியப் பிரச்சினைகளில் ஒன்று 13 மணித்தியால மின் துண்டிப்பு என்று சுட்டிக்காட்டிய அமைச்சர், பல நாட்களாக சமையல் எரிவாயு தட்டுப்பாடு, மருந்து பற்றாக்குறை, அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு, பொருட்களின் விலையேற்றம், கட்டுமாண துறை வீழ்ச்சியால் வேலை இழப்பு போன்ற பல காரணங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இதன் உச்சக்கட்டமாக கடந்த 9ஆம் திகதி சம்பவத்தை கருத முடியும். பல உயிர்கள், உடமைகள் பலியாகியமை இத்தினம் நாட்டுக்கு மிகவும் துரதிர்ஷ்ட நாளாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இப்பிரச்னையை உணர்ந்த அரசு, மக்கள் சார்பில் பல முடிவுகளை மேற்கொண்டது, 13 மணி நேர துண்டிப்பு 3 மணி நேரமாக குறைக்க நடவடிக்கை எடுத்தது.மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு வருடத்திற்கு 235 மில்லியன் ரூபா செலவாகும். அவுஸ்திரேலியா போன்ற பல நாடுகள் 480 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் மருந்துகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதனால் மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
எரிவாயு தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டுள்ளன. அடுத்த மூன்று மாதங்களுக்கு தேவையான எரிவாயுவை எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் விநியோகிப்பதற்கு அரசாங்கம் ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சமூகத்தில் பேசப்பட்ட பல மக்களின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் சாதகமான தீர்வுகளை வழங்கியுள்ளன. இந்த கடுமையான நிதி நெருக்கடிக்கு நிரந்தர தீர்வு காண கால அவகாசம் தேவைப்படும் எனறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.