அரிசி, பச்சைப்பயறு, கௌப்பி , உளுந்து, குரக்கன், நிலக்கடலை போன்றவற்றில் நாடு தன்னிறைவு அடைந்துள்ளதால், இந்த ஆண்டு மீண்டும் இவற்றை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
2021 இல் இரசாயன உரங்கள் மீதான தடையால் அரிசி மற்றும் பிற உள்ளூர் உணவுப் பயிர் உற்பத்தி வீழ்ச்சியடைந்ததன் காரணமாக, 2022 இல் 400 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் 800,000 தொன் அரிசி இலங்கையால் இறக்குமதி செய்யப்பட்டதுடன் ஏனைய உணவுப் பயிர்களையும் இறக்குமதி செய்யப்பட வேண்டியிருந்தது.
அதன்படி, 2023 ஆம் ஆண்டு வரை அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை. இந்த நாட்டுக்கான அரிசியின் வருடாந்த தேவை 2.4 மில்லியன் தொன்களாகும். கடந்த பெரு போக அறுவடையின் மூலம் 2.7 மில்லியன் தொன் அரிசியை உற்பத்தி செய்ய முடிந்துள்ளது. எனவே இவ்வருடம் மீண்டும் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும் அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.