நாடு முழுவதும் மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பு

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர், செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு நாடு முழுவதும் பணிபுறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். நேற்று குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மாத்திரம் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில், இன்று நாடு முழுவதும் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்களின் இடமாற்றச் சபையின் அனுமதியின்றி சுகாதார அமைச்சின் தன்னிச்சையான முடிவின் கீழ் மருத்துவப் பணிகளுக்கு புதிதாக மருத்துவர்களை பிழையான விதத்தில் நியமித்தமைக்கு எதிராக ஐந்து மாவட்டங்களில் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் நேற்று அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்தது. மேற்படி விடயங்களுக்கு மேலதிகமாக நேற்றுக்கூடிய அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு பின்வரும் விடயங்களை அவதானித்துள்ளது.

1. சட்டபூர்வமான மருத்துவ இடமாற்ற சபையின் அனுமதியின்றி விஷேட மருத்துவ நிபுணர்களின் இடமாற்ற பட்டியலைத் வெளியிடுதல்.

2. முறையான மருத்துவ இடமாற்ற சபையின் அனுமதியின்றி உள்ளகப் பயிற்சியை நிறைவு செய்த மருத்துவர்களுக்கு நியமனம் வழங்குதல்.

3. 2022 ஆம் ஆண்டுக்குரிய தர மருத்துவர்களின் இடமாற்ற பட்டியலை வெளியிடுவதில் நடைமுறைப்படுத்தும் திகதியை பின்பற்றாமை.

4. முறையான நடைமுறையின்றி முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தன மருத்துவ நிர்வாக தரத்தில் மேற்கொள்ளப்பட்ட விடயங்களை திருத்துவதற்கு அமைச்சரவை வழங்கிய அங்கீகாரத்தை நடைமுறைப்படுத்த தவறியமை.

5. இலங்கை மருத்துவ சபையின் தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படாமை.

6. தேசிய சம்பளக்கொள்கை மீறல்.

7. சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல சுகாதார அமைச்சினுள் பணியாற்றும் பல்வேறு துறைகளுக்கான ஊழியர்களுக்கிடையில் சம்பளக் கொள்கை மீறல் பிரச்சினைகளை உருவாக்க சுகாதார அமைச்சின் கடிதத்தலைப்பை பயன்படுத்துகிறார். போன்ற விடயங்களை சீர்செய்யக்கோரி சங்கம் இன்று காலை 8 மணிதொடக்கம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளது. ஆயினும் அவசர நோயாளிகளுக்கான சிகிச்சைகளில் தடையிருக்காது என்றும் சங்கம் குறிப்பிட்டுள்ளது. 

Spread the love