நாட்டின் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக அரசாங்கம் புதிய நடவடிக்கை

நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக பல்வேறு பிரச்சினைகளை மக்கள் எதிர்நோக்கியுள்ளனர். இந்நிலையில் குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக அரசாங்கம் புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இதற்கமைய நாடு முழுவதும் உள்ள தீவுக்கூட்டத்தை அபிவிருத்தி செய்து நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் திறம்பட பயன்படுத்தும் நோக்கில் புதிய அதிகாரசபை ஒன்றை நிறுவுவதற்கான நடவடிக்கையை அரசாங்கம் தற்போது எடுத்துள்ளது.

இதனூடாக சுற்றுலாத்துறை, எரிசக்தி மற்றும் மின்சக்தி துறைகளில் பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இலங்கை தீவுகள் அபிவிருத்தி அதிகார சபை என்ற புதிய நிறுவனத்தை ஸ்தாபிப்பது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இந்த தீவுகளில் வணிக ரீதியாக பெறுமதியுடைய கனிம வளங்கள் உள்ளன. அந்த கனிம வளங்களைப் பயன்படுத்தி மதிப்புக் கூட்டுத் தொழில்களை மேற்கொள்வதன் மூலம் பெருமளவு வருமானம் ஈட்டக்கூடிய வாய்ப்பு உள்ளது. மேலும், இந்த தீவுகளில் இயற்கையான இடங்களுக்கு ஏற்ப செயல்படுத்தக்கூடிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

காற்றாலை மின் திட்டங்கள், சூரிய மின் உற்பத்தி பூங்காக்கள், கடல் அலைகளிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்தல், புவி வெப்ப மின் நிலையங்கள் போன்றவற்றை கண்டறிந்து நிலைபெறுக்கு வலு அதிகார சபையின் உதவியோடு அதற்குரிய பொருத்தமான முதலீட்டாளர்களைக் கண்டுபிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை தவிர, தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் அமைக்கப்பட வேண்டிய அதிக இரைச்சல், அதிக வெப்ப உமிழ்வு மற்றும் கதிரியக்க உமிழ்வு கொண்ட தொழிற்சாலைகளையும் இந்த தீவுகளில் அமைக்கலாம்.

இதேவேளை விவசாயம் மற்றும் மீன்பிடி போன்ற மதிப்பு கூட்டப்பட்ட தொழில்களால் தீவுகளுக்கு நிறைய வருமானத்தை ஈட்ட முடியும். தீவுகளுக்கு இடையேயான கடல் போக்குவரத்திற்கு சூரிய மற்றும் காற்றில் இயங்கும் படகுகள் மற்றும் கப்பல்கள் பயன்படுத்தப்படுவது எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வாக அமையும்.

கடல் நீர் சுத்திகரிப்பு போன்ற திட்டங்களினூடாகவும் பெருமளவு வருமானத்தை ஈட்ட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அபிவிருத்தி செய்யப்படும் தீவுகளின் பாதுகாப்பு கடற்படை மற்றும் கடலோர காவல்துறை மற்றும் பொலிஸ் பாதுகாப்புப் பிரிவு ஆகியவற்றிடம் ஒப்படைக்கப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

Spread the love