நாட்டில் தனக்கு எதிரான போராட்டங்கள் வலுவடைந்த நிலையில், ஜனாதிபதி டுபாய் செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகின. கடந்த 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையை போராட்டக்காரர்கள் கைப்பற்றிய நிலையில், ஜனாதிபதி அதற்கு முன்னர் அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடமொன்றுக்கு சென்றிருந்தார்.
அவர் எங்கே தங்கியிருந்தார் என்ற தகவல்கள் எதுவும் இதுவரையில் உறுதியாக அறிவிக்கப்படவில்லை. ஆனால் அவர் கடற்படையின் விசேட கப்பலொன்றில் தங்கியிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இதேவேளை பாதுகாப்பு படைத் தலைமையகம், பாதுகாப்பு அதிகாரிகளின் வீடுகள் என பல இடங்களில் அவரும் அவரின் குடும்பத்தினரும் தங்கியிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால் எதுவும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.
இவ்வாறான நிலைமையில் அவர் அமெரிக்காவுக்கு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டதாகவும், ஆனால் அதற்கான வீசா நிராகரிக்கப்பட்டதால் அவர் துபாய் செல்வதற்கு திட்டமிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக அவரும் பஸில் ராஜபக்ஷவும் மற்றும் அவர்களின் குடும்பத்தினரும் செல்வதற்கு அதிகாரிகளும் பயணிகளும் எதிர்ப்பு வெளியிட்டமையினால் அந்தத்திட்டம் கைவிடப்பட்டது.
அதேவேளை அவர்கள் தனிப்பட்ட விமானம் மூலம் அம்பாந்தோட்டை விமான நிலையத்தின் ஊடாக செல்வதற்கு முயற்சித்துள்ளதாகவும் அதுவும் தோல்வியடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. இவ்வாறான நிலைமையில், நேற்று அதிகாலை 1.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து ஜனாதிபதியும், அவரின் பாரியாரும் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளும் விமானப் படையின் விமானத்தின் மூலம் மாலைதீவு சென்றுள்ளார். ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் விமானப் படையின் விமானத்தின் ஊடாக அவர் பயணத்தை மேற்கொண்டதாக விமானப்படை தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதன்படி அதிகாலை 3 மணியளவில் மாலைதீவை சென்றடைந்த ஜனாதிபதி அங்கு, பாதுகாப்பான இடமொன்றில் தங்கியிருந்தார். இதன்போது அங்கு வசிக்கும் இலங்கையர்கள் அந்த இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன், அந்நாட்டு அதிகாரிகளும் இலங்கை ஜனாதிபதிக்கு தஞ்சம் வழங்கப்படக்கூடாது என்று வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் ஜனாதிபதியும் அவரும் பாரியாரும் மற்றும் பாதுகாப்பு பிரிவினரும் அங்கிருந்து சிங்கபூர் சென்று துபாய் செல்வதற்கான ஏற்பாடுகளில் நேற்று மாலை வரையில் ஈடுபட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகின.