நாட்டில் கடந்த நாள்களில் ஏற்பட்ட கலவரத்தால் சுமார் 2 ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காலிமுகத்திடலில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரச எதிர்ப்பாளர்கள் மீது பெரமுனவின் ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலை அடுத்து நாடெங்கும் கலவரங்கள் வெடித்தன. ஆளும் பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடைய வீடுகளுக்குத் தீவைக்கப்பட்டதுடன் பெறுமதியான வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டன. இந்தக் கலவரத்தால் ஏற்பட்ட சொத்திழப்பே சுமார் 2 ஆயிரம் கோடி ரூபா என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், ஆர்ப்பாட்டம் என்ற போர்வையில் பொது அல்லது தனியார் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தப்படுமாயின் அது தொடர்பில் அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்களும் பொலிஸாரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய, 1997 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அறியத்தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு, அவசர தொலைபேசி இலக்கமான 119 என்ற தொலைபேசி இலக்கத்துக்குத் தொடர்புகொண்டும் இது தொடர்பில் தெரியப்படுத்த முடியும் என்று பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.