பாலிஸ்டிக் ஏவுகணை எனச் சந்தேகிக்கப்படும் மற்றொரு ஏவுகணையை நேற்று திங்கட்கிழமை அதிகாலை ஏவி வடகொரியா சோதனை நடத்தியுள்ளது. இந்த மாதத்தில் வட கொரியா நடத்திய நான்காவது ஏவுகணைச் சோதனையாக இது அமைந்துள்ளது.
அத்துடன், வடகொரிய அதிகாரிகள் ஐவருக்கு அமெரிக்கா தடைவிதித்த பின்னர் ஏவப்பட்ட இரண்டாவது ஏவுகணையாகவும் இது அமைந்தது. பதற்றங்களைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட பேச்சுவார்த்தைகளுக்கு திரும்புமாறு வட கொரியாவை அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அத்துடன், அணு ஆயுதம் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைச் சோதனைகளை நிறுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனினும் எங்களது ஏவுகணை சோதனைகள் தற்காப்புக்கானது. எங்களின் இறையாண்மை உரிமையை உறுதி செய்யும் வகையிலேயே இச்சோதனைகள் இடம்பெறுகின்றன என வட கொரியா தெரிவித்துள்ளது.
இந்நிலையில் புதிய தடைகளை விதிப்பதன் மூலம் அமெரிக்கா திட்டமிட்டு பதற்றத்தைத் தூண்டுகிறது. அமெரிக்காவின் தடைகளுக்கு எதிர் வினையாற்றுவோம் எனவும் வடகொரியா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.