அமைச்சர்கள் தங்களது மனதிலுள்ளவற்றை பொதுவெளியில் பேசுவது பொருத்தமற்றது என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரைத்த அவர், ஜனாதிபதியை தெரிவு செய்தால் அந்த ஜனாதிபதியின் கொள்கையை பின்பற்ற வேண்டும். நாம் அனைவரும் தனித்து ஆட்சியமைக்க முயலாமல் மக்களை ஆள முயற்சித்தால் ஆட்சி சிறப்பாக இருக்கும் எனத் தெரிவித்தார்.
தற்போது உலகளாவிய ரீதியில் கொவிட் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக உலகளவிலும் நமது நாட்டிலும் பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்த நேரத்தில் நாம் ஒவ்வொருவரும் தனித்தனியே அரசனாவதற்கு போராடுவதை விடுத்து, மக்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றினால் இந்நாட்டு மக்களை அரசர்களாக்க முடியும் என நினைக்கின்றேன்.
எனவே, தனிப்பட்ட கருத்துகளை ஒதுக்கி வைத்துவிட்டு, மக்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.