நாளை அரச, தனியார் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானம்

அரச, தனியார் ஊழியர்கள் அரசுக்கு எதிராக நாளை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். இதனால் நாளை 28 ஆம் திகதி நாடு முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களுக்கும் மரக்கறிகள் நாளை விநியோகிக்கப்படமாட்டாதென அகில இலங்கை விசேட பொருளாதார மத்திய நிலையங்களின் சங்கம் தெரிவித்துள்ளது. அதன் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி இதனை தெரிவித்தார்.

அரச ஊழியர்கள் மற்றும் தனியார்துறை ஊழியர்கள் அரசாங்கத்திற்கு எதிராக நாளை முன்னெடுக்கவுள்ள தொழிற்சங்க நடவடிக்கையினால் மரக்கறிகளை  அனுப்ப வேண்டாம் என பொருளாதார நிலையங்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் அரச கட்டமைப்பில் உள்ள 10 தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளன. அதிபர், ஆசிரியர்கள், ஆசிரியர் ஆலோசகர்கள் மற்றும் பிரிவெனா ஆசிரியர்கள் ஏப்ரல் 28ஆம் திகதி சுகவீன விடுமுறை அறிவித்து பாரிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் இது தொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உப தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.

Spread the love