நிதித்துறை நெருக்கடி முகாமைத்துவக் குழு மற்றும் நிதித்துறை நெருக்கடி முகாமைத்துவம் தொடர்பான தொழில்நுட்பக் குழுவை நிறுவுவதற்கு அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (08) அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோது அமைச்சரவைப் பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார்.
இதுதொடர்பாக நேற்று நடைபெற்ற ;அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:
நிதித்துறை நெருக்கடி முகாமைத்துவக் குழு தாபித்தல்
அரச நிதி, கடன், மற்றும் சென்மதி நிலுவைகள் பிரச்சினைகளால் நிதித்துறைக்கு ஏற்படுகின்ற தாக்கத்தின் அடிப்படையில் நிதிநெருக்கடி ஏற்படுவதை தடுத்தல் மற்றும் அவ்வாறான நிதி நெருக்கடிகள் ஏற்படின் அதன் செலவுகளை குறைத்தல் மிகவும் முக்கியமாகும். அதற்கமைய, தற்போது இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு ஆக்கபூர்வமான நெருக்கடி முகாமைத்துவம் மற்றும் காலத்தோடு தழுவிய தீர்மானங்களை எடுத்தல் அவசியமாகும்.
அதனால், இலங்கை மத்திய வங்கி மற்றும் நிதி விடயதானத்துக்குப் பொறுப்பான அமைச்சுக்கும் இடையில் நிதித்துறை நெருக்கடிக்கான தயார்படுத்தல் மற்றும் முகாமைத்துவம் தொடர்பாகவும், அவரவர் வகிபாகங்கள் தொடர்பாகவும் ஒருங்கிணைப்பை மேற்கொள்வதற்காக, நிதித்துறை நெருக்கடி முகாமைத்துவக் குழு மற்றும் நிதித்துறை நெருக்கடி முகாமைத்துவம் தொடர்பான தொழிநுட்பக் குழுவை தாபிப்பதற்கும், வங்கிகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்திற்கு தேவையான ஏற்பாடுகளை உட்சேர்ப்பதற்கும் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.