நியூசிலாந்திற்கு ஆய்வுப் பயணமொன்றை மேற்கொண்டுள்ள இலங்கை பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் நியூசிலாந்தின் முன்னாள் பிரதமர்களானஜெசிந்தா ஆர்டன் (Jacinda Ardern) மற்றும் ஹெலன் கிளார்க் (Helen Clark) ஆகியோரை சந்தித்துள்ளது. இந்த சந்திப்பில் அரசியலில் பெண்களின் தலைமைத்துவத்தை வலுப்படுத்துதல், பாலின சமத்துவ ரீதியான பல்வகைத் தன்மையைக் கட்டியெழுப்புதல் தொடர்பில் முன்னாள் பிரதமர்களுடன் விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.
2017 முதல் 2023 வரை நியூசிலாந்தில் பிரதமர் பதவியை வகித்த ஜெசிந்தா ஆர்டன் தனது பதவிக்காலத்தில் பொருளாதார, அரசியல் நெருக்கடிகள் போன்று COVID 19 பெருந்தொற்று நிலைமையின் போது, நாட்டிற்கு தலைமை வகித்த அனுபவங்களைப் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
சமமான சம்பள தரத்தை உருவாக்குவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், குழந்தைப் பிறப்பின் போது பெற்றோருக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்குதல், குழந்தை வறுமை நிலையை குறைத்தல், நாட்டிலும் அரசியலிலும் பாலின சமத்துவத்திற்குள் உள்வாங்கப்படாத ஏனையவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது உள்ளிட்ட விடயங்கள் இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
அத்துடன், நியூசிலாந்தின் முதலாவது பெண் பிரதமரான ஹெலன் கிளார்க் இலங்கை பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்திடம் தமது அரசியல் அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.
பெண்களை வலுப்படுத்துவதற்காகத் தனது பதவிக்காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், பெண்களின் ஓய்வூதிய காலத்திற்கான சேமிப்பை ஊக்கப்படுத்துதல் மற்றும் சிவில் விவாக சீர்திருத்தங்கள் தொடர்பான தமது கருத்துகளையும் அவர் முன்வைத்தார்.