கெரிகேரியில் இருந்து ஒக்லாந்திற்கு சென்ற விமானத்தில் பணிப்பெண் ஒருவருக்கு ஒமிக்ரோன் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, குறித்த விமானத்தில் பயணித்த நியூஸிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் மற்றும் ஆளுநர் ஜெனரல் டேம் சிண்டி கிரோ இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஆர்டெர்னின் தலைமை செய்தி செயலாளர் ஆண்ட்ரூ காம்ப்பெல் உட்பட விமானத்தில் இருந்த அனைவரும் கண்டறியப்பட்ட ஒமிக்ரோன் தொற்றாளருடன் நெருங்கிய தொடர்பாளர்களாக கருதப்படுகிறார்கள். சுகாதார அமைச்சின் தேவைகளின்படி ஆர்டெர்ன் நேற்றுக்காலை பி.சி.ஆர். பரிசோதனையை மேற்கொண்டதாக பிரதமரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். அந்த பரிசோதனை முடிவுகள் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ஆர்டெர்ன், தொற்று அறிகுறியற்றவராகவும் நன்றாக உள்ளதாகவும் செய்தித்தொடர்பாளர் மேலும் கூறியுள்ளார்.