“சமுத்திரா தேவி” ஐ இழுத்து வந்தது “வடதாரகை”

நெடுந்தீவு- குறிகாட்டுவான் இடையிலான கடற்போக்குவரத்துச் சேவையின் போது சமுத்திரதேவி படகு இடை நடுவில் பழுதடைந்தமையால் இடம் பெறவிருந்த பாரிய அசம்பாவிதம் மயிரிழையில் தவிர்க்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, நேற்றுக் காலை நூற்றிற்கும் மேற்பட்ட பயணிகளுடன் நெடுந்தீவிலிருந்து குறிகாட்டுவான் நோக்கிப் புறப்பட்ட பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் சமுத்திரதேவிப் படகு இடை நடுவில் பழுதடைந்த நிலையில் வடதாரகைப் படகின் உதவியுடன் குறிகாட்டுவான் நோக்கி இழுத்து வரப்பட்டது.


சுக்கான் தடி உடைந்தமையினால் இடைநடுவில் பயணிகளை வடதாரகைப் படகிற்கு மாற்ற முடியாத நிலையிலும், பல இடையூறுகளுக்கு மத்தியிலும் வடதாரகைப் படகினால் இழுத்து வரப்பட்டது. இதன் காரணமாக நேற்றுக் காலை 7 மணியளவில் நெடுந்தீவிலிருந்து புறப்பட்ட பொதுமக்கள் மிகவும் காலதாமதமாகி முற்பகல் ஒரு மணியினை அண்மித்தே குறிகாட்டுவான் இறங்கு துறைமுகம் வந்து சேர்ந்தனர். 

Spread the love