நெருக்கடிகளை எதிர்கொள்ள இலங்கைக்கு ஐ.நா. உதவும்

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ள ஐக்கிய நாடுகள் சபை ஆதரவளித்து உதவிகளை வழங்கும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனாசிங்கர் ஹம்டி உறுதியளித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸீக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர்ஹம்டிக்கும் இடையில் இடம் பெற்ற சந்திப்பு தொடர்பிலான ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் மற்றும் பல பிரச்சினைகள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸால் பல கருத்துக்கள் ஐக்கிய நாடுகள் சபையின் ஒருங்கிணைப்பாளருக்கு முன்வைக்கப்பட்டன.

அதற்குப்பதிலளித்த ஒருங்கிணைப்பாளர் சர்வதேச உதவிகளைப் பெறுவதற்கும். அத்தியாவசியப் பொருள்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கும், வேலையின்மை மற்றும் போசாக்குக் குறைபாடு போன்ற பல பிரச்சினைகளுக்கும் ஐக்கிய நாடுகள் சபை முழுமையான ஆதரவை வழங்கும். அத்துடன் இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை பலதரப்பு முறையீடுகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் இலங்கை அரசாங்கத்துடன் ஐக்கிய நாடுகள் சபை தனது ஒத்துழைப்பைத் தொடரும் என்றும் ஹனா சிங்கர் உறுதியளித்தார் என்றுள்ளது.

Spread the love