நேற்று முதல் அமுலாகும் வகையில், 66 சதவீத மின் கட்டண அதிகரிப்பிற்கு இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது. ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தவிர்ந்த ஏனைய 03 உறுப்பினர்களின் இணக்கப்பாட்டிற்கு அமைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொது பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் ஏனைய அனைத்து தரப்பினரின் யோசனைகளுக்கு அமைவாக, 142 பில்லியன் ரூபா வருமானம் கிடைக்கும் வகையில், 36 வீத மின் கட்டண அதிகரிப்பிற்கு ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்டதுடன், குறித்த யோசனை ஜனக்க ரத்நாயக்கவினால் நேற்று முன்தினம் முன்வைக்கப்பட்டது.
எவ்வாறாயினும், குறித்த யோசனைக்கு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க மாத்திரம் இணக்கம் தெரிவித்தமையினால், அது நிராகரிக்கப்பட்டது. பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்கள் குறித்த யோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதற்கமைய, ஆணைக்குழுவின் பெரும்பான்மை உறுப்பினர்களின் இணக்கத்தின் அடிப்படையில், மின் கட்டணத்தை 66 வீதத்தால் அதிகரிப்பதற்கான யோசனை நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், மின் கட்டணப் பட்டியல் தயாரிக்கப்படும் விதம் தொடர்பில் ஆணைக்குழுவும் இலங்கை மின்சார சபையும் விளக்கமளித்துள்ளன.
புதிய மின் கட்டண திருத்தங்களுக்கு அமைவாக, 60 அலகுகளை பயன்படுத்தும் வீடொன்றுக்கான மின் கட்டணம் 276 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது. இதற்கமைய, 60 அலகுகளை பயன்படுத்தும் வீடொன்றுக்கான மின் கட்டணத்திற்கு இதுவரை நடைமுறையிலிருந்த 680 ரூபா கட்டணத்தொகை 2560 ரூபா வரை அதிகரிக்கப்படவுள்ளது.
புதிய கட்டணத் திருத்தத்திற்கு அமைவாக, 30 அலகுகள் பயன்பாட்டை கொண்ட வீடொன்றுக்கு இதுவரை காணப்பட்ட 360 ரூபா மின் கட்டணம் 1300 ரூபா வரை அதிகரிக்கப்படும். இது 261% அதிகரிப்பாகும்.
90 அலகு பயன்பாட்டிற்காக இதுவரை அறவிடப்பட்ட 1800 ரூபா மின் கட்டணம், புதிய திருத்தத்திற்கு அமைவாக 4430 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
200 அலகுகளுக்கும் மேற்பட்ட மின்சார பாவனையைக் கொண்ட வீடுகளுக்காக மின் கட்டணம் 32 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய கட்டண திருத்தத்தின் கீழ் சாதாரணமாக வீடொன்றில் பயன்படுத்தப்படும் மின்சாரம், 900 அலகிற்கான பிரிவிற்குள் உள்ளடங்கி, மின் கட்டணம் பாரியளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது.