வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காக அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப்சாய் நீண்ட காலத்துக்குப் பின் தனது சொந்த நாடான பாகிஸ்தானுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை வந்துள்ளார். பெண்களின் கல்விக்காக பாடுபட்டு வருகின்ற மலாலா 15 வயதுச் சிறுமியாக இருந்த சமயம் கடந்த 2012 ஆம் ஆண்டு தலிபான் தீவிரவாதிகள் சுட்டனர். இதனால் கழுத்தில் குண்டு பாய்ந்த நிலையில், லண்டனில் உயர் சிகிச்சை பெற்று உயிர்தப்பினார்.
பெண்களின் கல்விக்காக தொடர்ந்து பாடுபட்டு வரும் மலாலாவுக்கு 2014 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றிருந்தார். இந்நிலையில் மலாலா துப்பாக்கி சூட்டுக்கு பின் பாகிஸ்தான் வருவது இது இரண்டாவது முறையாகும். இதேவேளை பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளத்தின் தாக்கத்தை சர்வதேச கவனத்திற்கு கொண்டு செல்லவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவும் இந்தப் பயணம் உதவும் என மலாலா தெரிவித்துள்ளார். அத்துடன் ஒட்டுமொத்த உலகமும் மவுனம் காக்கும்போது, ஒரே ஒரு குரல்கூட சக்திவாய்ந்ததாக மாறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.