நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முயற்சித்த முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளை, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விசேட பிரமுகர்களுக்கான ‘பட்டுப் பாதை’ பயணிகள் முனையத்தில் கடமையிலிருந்து மறு அறிவித்தல் வரை விலகுவதற்கு இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இலங்கையில் தற்போது நிலவும் ஸ்திரமற்ற மற்றும் நெருக்கடியான சூழ்நிலையை கருத்திற்கொண்டும், ‘பட்டுப் பாதை’ முனையத்தை பயன்படுத்தி அதிகளவில் அரசியல் பிரமுகர்கள் நாட்டை விட்டு வெளியேறும் வாய்ப்பு உள்ளதாலும் அத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் கே.ஏ.எஸ்.கனுகல தெரிவித்துள்ளார். இதேவேளை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக நேற்று செவ்வாய்க்கிழமை நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முயற்சித்த முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தடுத்து நிறுத்தப்பட்டார்.
பசில் ராஜபக்ச நேற்று அதிகாலை 3.15 மணிக்கு டுபாய் செல்லவிருந்த எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் விமானமான இ.கே-349 இல் செல்வதற்காக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்து ஆவணங்களை சமர்ப்பிக்க முற்பட்ட நிலையிலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. டுபாய் வழியாக அமெரிக்காவுக்குச் செல்ல விமான பயணச் சீட்டினை இவர் நேற்றுமுன்தினம் மாலை பெற்றதாகத் தகவல்கள் வெளியாகின. அவருடன் ராஜபக்ச குடும்பத்தில் மேலும் 6 பேர் பயணிப்பதாக விமான ஆசன ஒதுக்கீட்டு பட்டியலை அடிப்படையாக கொண்டு சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகின. பசில் ராஜபக்ச பெற்ற விமான பயணச் சீட்டின்படி, அவர் மீண்டும் இலங்கைக்கு திரும்பும் திகதி 2023 மார்ச் 01 எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று அதிகாலை பசில் ராஜபக்ச தனக்கு மிக நெருக்கமான சிலருடன் பலத்த பாதுகாப்புடன் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு சென்றுள்ளார்.
இதன்போது அவர் விமானத்துக்கு செல்ல விமான நிலையத்தில் விஷேட விருந்தினர் நுழைவுப் பாதையை (பட்டுப்பாதை) பயன்படுத்தியுள்ளார். எனினும் விமான நிலையத்தின் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளின் பரிசோதனை கூடத்துக்கு அருகே, பொது மக்கள் பசில் ராஜபக்சவை அவதானித்துள்ளனர். எனினும் அவர்கள், தமது விமானத்துக்கான நேரம் நெருங்கியிருந்த போதும் அதனையும் பொருட்படுத்தாது பசில் ராஜபக்சவுக்கு எதிராக எதிர்ப்பில் ஈடுபட்டனர். பயணிகள் தொடர்ச்சியாக எதிர்ப்பை வெளிப்படுத்தும் போது, குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளில் பலரும் பசில் ராஜபக்ச தொடர்பில் கடமைகளில் ஈடுபட மறுத்ததாகவும் இதையடுத்தே குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளின் கடும் எதிர்ப்பால் அவர் திரும்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.