மனித உரிமைகள் பேரவையின் 50ஆவது அமர்வின் பக்க அம்சமாக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட் , சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் செயலாளர் நாயகம் மற்றும் சீனா, ஐரோப்பிய ஒன்றியம், அவஸ்திரேலியா, கொரியக் குடியரசு, ஜேர்மனி, நெதர்லாந்து மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகளின் நிரந்தாப் பிரதிநிதிகளை சந்தித்தார். மனித உரிமைகள் உயர்ஸ் தானிகர் திருமதி மிச்செல் பக்லெட் உடனான சந்திப்பின் போது. மனித உரிமைகள் பேரவை உட்பட சர்வதேச அமைப்புடன் இலங்கை நேர்மையாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் செயற்படுவதாக உயர்ஸ்தானிகருக்கு உறுதியளித்தார்.
காணாமல் போனோர் அலுவலகம், இழப்பீடுகளுக்கான அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம், நிலையான அபிவிருத்தி இலக்கு பேரவை மற்றும் இலங்கை மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட உள்ளூர் பொறிமுறைகளினால் நாட்டில் எட்டப்பட்டுள்ள பெறுபேறுகளையும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விரிவாக விவரித்தார். இலங்கைக்கு விஜயம் செய்வதற்காக உயர்ஸ்தானிகருக்கு முன்னர் விடுக்கப்பட்ட அழைப்பு இன்னும் அப்படியே இருப்பதாக அமைச்சர் பீரிஸ் தெரிவித்தார். தற்போதைய அமர்வின் ஆரம்பத்தில் உயர்ஸ்தானிகர் அறிவித்தமைக்கு அமைய, அவரது நிறைவான ஓய்விற்காக வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
சீனாவின் நிரந்தரப் பிரதிநிதியான தூதுவர் சென் சூ. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் செயலாளர் நாயகம் ஜெகன் சப்பகைன், அரபு லீக்கின் ஒருங்கிணைப்பாளரும் ஜோர்தானின் நிரந்தரப் பிரதிநிதியுமான தூதுவர் வாலிட் காலிட் ஒபேதத், கொரியக் குடியரசின் நிரந்தரப் பிரதிநிதியான தூதுவர் டேஹோ லீ, நெதர்லாந்தின் தூதரகப் பொறுப்பாளர் நடாலி ஒலிஜ்ஸ்லேகர் மற்றும் ஜேர்மனியின் பிரதி நிரந்தரப் பிரதிநிதியான தூதுவர் ஹான்ஸ்-பீட்டர் ஜூகல் ஆகியோருடனும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் இருதரப்பு சந்திப்புக்களில் ஈடுபட்டார்.