பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை திருத்துமாறு சட்டத்தரணிகள் சங்கம் மீண்டும் வலியுறுத்தல்

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் சில சரத்துகளால் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக அந்த சட்டமூலத்தை  மீளாய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழு பரிந்துரை செய்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர், செயலாளரின் கையொப்பங்களுடன் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்மையில் வௌியிடப்பட்ட பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டமூலத்தை மீளாய்வு செய்வதற்காக விசேட குழுவொன்றை நியமித்ததாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கூறியுள்ளது.  சட்டமூலத்தின் சில சரத்துகள் நீதியை நிலைநாட்டும் முறைமையை மீறும் வகையில் அமைந்துள்ளதாகவும் அது அடிப்படை உரிமைகளுக்கு முரணானது எனவும் குறித்த குழு கூறியுள்ளதாக சட்டத்தரணிகள் சங்கத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டமூலத்தில் உள்ள குறித்த சரத்துகள் கருத்துச் சுதந்திரம், ஒன்றுகூடுவற்கான சுதந்திரம் பயணங்களை மேற்கொள்வதற்கான சுதந்திரம் உள்ளிட்ட உரிமைகளை மீறும் வகையில் அமைந்துள்ளதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனால் சட்டமூலத்தை திருத்துமாறு நீதி அமைச்சு உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமும் கோரியுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. திருத்தமின்றி சட்டமூலம் பாராளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டால் அதனை ஆட்சேபனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுப்பதாக சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. 
 

Spread the love