பயங்கரவாத தடைச் சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும் – சஜித் பிரேமதாஸ

நாட்டில் நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச்ச சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டு என்று எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ கூறியுள்ளார்.

 இது தொடர்பில் தமது கட்சியின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் எழுத்து மூல ஆவணத்தை சஜித் பிரேமதாஸ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனிடம் இன்று நேரில் கையளித்தார். 

இது தொடர்பாக எம்.ஏ. சுமந்திரன் அவர்கள் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கையில், “பல தசாப்தங்களாக அமுலிலுள்ள இப் பயங்கரவாதத் தடைச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் நாம் கையெழுத்து வேட்டையை முன்னெடுத்து வருகின்றோம். இந்த முன்னெடுப்புக்கு கட்சிகள் சார்பாகவும், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மூலமும், சிறந்த கல்வியலாளர்கள், புத்திஜீவிகள் தரப்பிலும் , மதத்தலைவர்கள் மத பேதமின்றியும் மாணவர்கள் மட்டத்திலும் மற்றும் இலங்கை வாழ் மூவின மக்களும் தங்கள் ஆதரவை வழங்கி வருகின்றனர்”. 

“அனைத்து தரப்பிலும் ஒரே விதமாக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் முற்று முழுதாக நீக்கப்பட்டு, சர்வதேச கட்டுப்பாடுகளுக்கும், நியமங்களுக்கு ஏற்புடைய சட்டமொன்று அதற்குப் பதிலாக கொண்டு வரப்பட வேண்டுமென்பதே தமது கட்சி சார்பான நிலைப்பாடு என்றும், அந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் எழுத்து மூல ஆவணத்தை எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ அவர்கள் இன்று காலை என்னிடம் கையளித்தார். அதை அவர் நாடாளுமன்ற வளாகத்திலுள்ள  எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் வைத்து இந்த ஆவணத்தை என்னிடம் கையளித்தார்.

இந்த சந்திப்பின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரிஷாத் பதியுதீன், வேலுசாமி இராதாகிருஷ்ணன், பழனி திகாம்பரம், மயில்வாகனம் உதயகுமார் மற்றும் புத்திக பத்திரண ஆகியோரும் கூட இருந்தனர் ” – என்று அவர் மேலும் கூறினார்.

Spread the love