மேல், சபரகமுவ மற்றும் வட மேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வளிமண்டலவி யல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
சபரகமுவ மாகாணம், களுத்துறை, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளில் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகலாம் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வட மத்திய மற்றும் வட மேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மணித்தியாலத்துக்கு 40 கிலோமீட்டர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதேவேளை, காலியிலிருந்து மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகள் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் மீனவர்கள் மற்றும் கடற்படையினர் இது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறும் திணைக்களம் எச்சரித்துள்ளது.
அத்தனகல்லு ஓயா, களு, களனி, நில்வலா மற்றும் கிங் கங்கைகளின் இரு கரைகளிலும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனிடையே, இரத்தினபுரி, கேகாலை, மாத்தறை, கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது.