பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அரசு பழிவாங்க பாவிக்கிறதா ? – சிறிதரன்

இலங்கையில் நடைபெற்ற ரவிராஜ் கொலை வழக்கை இந்த அரசாங்கம் இது வரை சரிவரக் கையாளவில்லை, அத்துடன் அதற்கான நீதியையும் அது இதுவரை வழங்கவில்லை எனவும் தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், பயங்கரவாத தடைச் சட்டத்தை தமிழரைப் பழிவாங்குவதற்கான சட்டமாகவே அரசாங்கம் இதுவரை பயன்படுத்துகிறது என  வவுனியாவில் (28/02/2022) அன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், “பயங்கரவாத தடைச் சட்டம் தமிழர்களை ஒழிப்பதற்காக அவர்கள்  மீது ஏவப்பட்ட மிகக் கொடூரமான ஒரு சட்டமாகவே இதுவரை காலமும் செயற்பட்டு வந்துள்ளது. அதனால் அச்சட்டத்துக்கான விலையாகத்தான் நாங்கள் இதுவரை பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை இந்த மண்ணிலே இழந்திருக்கின்றோம். பல ஆயிரக்கணக்கான மக்களை பறிகொடுத்திருக்கிறோம்

எமது மண்ணில் மாவீரர்களை நினைவு கூர முடியாதவர்களாகவும் ஒருசேர இறந்த எமது உறவுகளை நினைத்து அஞ்சலி செலுத்த முடியாதவர்களாகவும் அது மட்டுமல்ல எங்களுக்காக போராடிய சங்கிலிய மன்னன், பண்டாரவன்னியன், அக்கராயன் மன்னன் ஆகியோரை நினைக்க முடியாதவர்தவர்களாகவும் அப்படி நினைத்தால் பயங்கரவாதிகளாகவும் பார்க்கப்பட்டு பயங்கரவாத தடைச் சட்டம் எங்கள் மீது பாய்கிறது. 

அதனால்தான் யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு விட்டது என்று  கூறப்பட்டபோதும், கூட யுத்தத்துக்கு பின்னரான போதும் பல நூற்றுக்கணக்கனக்கான இளைஞர்கள் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய பகுதிகளான வட புலத்தில் கைது செய்யப்பட்டு அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இன்னும் அடைத்து வைக்கப்படுகின்றார்கள். 

உலகின் ஓர் பகுதியில் ஜனநாயகத்தையும், மனித உரிமைகளையும், மனித சாசனங்களையும் மதிக்க வேண்டும் என்று குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்ற இந்த காலக கட்டத்தில் மனித உரிமைகளை மீறுவதுடன் மனித உரிமைச் சாசனங்களையும் மீறி இலங்கையினுடைய இந்த கொடூரமான சட்டம் எங்கள் மீது தொடர்ந்து பாய்ந்த வண்ணமே இருக்கிறது. என்றார். 

இந்த சட்டத்தை நீக்குமாறு மேற்கொள்ளப்படும் போராட்டம் தொடர்ச்சியாக இன்னும் பல வடிவங்களில் மேற்கொள்ளப்படும் இந்த சட்டம் நீக்கப்படும் வரை எங்களது நடவடிக்கைகளை தொடர்ச்சியாக  மேற்கொள்வோம் அது எமது தார்மீக பொறுப்பு வாய்ந்த கடமையாகும் என்றார். அதேபோல் இலங்கையில் ரவிராஜ் கொலை வழக்கை இந்த அரசாங்கம் நீதியான முறையில்  கையாளவில்லை. இதுவரையும் தகுந்த நீதியை வழங்கவில்லை. பள்ளி மாணவியான  கிருசாந்தியினுடைய கொலை வழக்குக்கு  நீதி என்னும் சரியாக கிடைக்கவில்லை. திருகோணமலையில் விருலக்சன் என்ற பள்ளி மாணவன் கைது செய்யப்பட்டு நீண்ட நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு தற்போது தான் விடுவிக்கப்பட்டான். இவையெல்லாம் எமது கண்முன்னே நடைபெறுகின்ற சம்பவங்கள்.

அரசாங்கத்திற்கு வேண்டியவர்கள், அரசாங்கத்தில் இருப்பவர்கள் யாரையும் பழிவாங்க வேண்டும் என்றால் அதற்காக அவர்கள் பயன்படுத்துகின்ற ஒரு சட்டமாக இதனை பயன்படுத்துகிறார்கள். எனவே இதனை நீக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Spread the love