பாகிஸ்தானின் நூரியா பாத் பகுதியில் நள்ளிரவில் பயணித்துக்கொண்டிருந்த பஸ்ஸில் தீ பரவியதில் குழந்தைகள் உட்பட 21 பேர் தீயில் கருகி பலியாகினர். 60-க்கும் மேற்பட்டோர் பயணித்துக்கொண்டிருந்த பஸ்ஸில் திடீரென தீ பரவியுள்ளது. இதனால், பஸ்ஸை சாரதி நிறுத்தியுள்ளார். இதனிடையே தீ முற்றிலும் பரவியுள்ளது.
பயணிகள் சிலர் பஸ் கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு வௌியில் குதித்து உயிர் தப்பியுள்ளனர். எனினும், உள்ளே சிக்கிக்கொண்ட குழந்தைகள் உட்பட 21 பேர் தீயில் கருகி பரிதாபமாக பலியாகினர். 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் பஸ்ஸில் பிடித்த தீயை அணைத்தனர். பஸ்சில் இருந்த குளிரூட்டியில் தீப்பிடித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தீப்பிடித்த பஸ்ஸில் பயணம் செய்தவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்தவர்களாவர்.
சமீபத்தில் பாகிஸ்தானில் பெய்த கனமழையால் பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட்டு கராச்சியில் தங்க வைக்கப்பட்டனர். வெள்ள பாதிப்பு குறைந்ததால், கராச்சியில் இருந்து சைர்பூர் நாரன் ஷா பகுதிக்கு மக்கள் பஸ்ஸில் சென்றுகொண்டிருந்த போது விபத்தில் சிக்கினர். பலியானவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.