பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் குணரத்னவின் ஊடக அறிக்கை
மரியாதைக்குரிய மகா சங்கத்தினர், உட்பட அனைத்து மதத் தலைவர்கள், பெற்றோர்கள், நண்பர்கள், குழந்தைகள் மற்றும் அனைத்து இலங்கை பிரஜைகளே!வன்முறையை தவிர்க்குமாறு உங்கள் அனைவரிடமும் முதலில் கேட்டுக்கொள்கின்றேன். நாட்டில் நிலவும் பரபரப்பான சூழ்நிலை காரணமாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் திரண்டு ஒழுங்கமைக்கப்பட்ட தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
“அமைதியான போராட்டம்” என்ற தொனிப்பொருளின் கீழ் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காக பிரதிநிதித்துவப்படுத்துவதாக இந்தப்போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் இவ்விடயத்தில் இரண்டு குழுக்கள் செயற்படுவதை அவதானிக்க முடிகிறது.
ஒரு பிரிவினர் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி அமைதியாக கலைந்து செல்கின்ற அதேவேளை மற்றைய குழு பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து, முக்கிய வீதிகள் மற்றும் பொது இடங்களில் மக்களின் அன்றாட வாழ்க்கையை சீர்குலைக்கும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் வன்முறைப் போராட்டங்களை வேண்டுமென்றே நடத்துவதாகத் தெரிகிறது. அவசரகாலச் சட்டம் நடைமுறையில் இருக்கும் பின்னணியில், மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் அமைதியான போராட்டங்கள் நடத்தப்படுவதை ஏற்றுக்கொள்ளலாம்.
என்றாலும், அமைதிப் போராட்டங்களை நடத்துவது என்ற போர்வையில் செயல்பட்டு, அமைதியை நிலைநாட்டுவதில் உறுதி பூண்டிருக்கும் பாதுகாப்புப் படையினரை ஒரு சங்கடமான நிலைக்கு உட்படுத்தி தனியார் சொத்துக்களை சேதப்படுத்தும் அதேவேளையில், இந்த பிரச்சாரம் வன்முறை தன்மையின் காரணமாக ஜனநாயகத்தின் கட்டமைப்பிற்கு அப்பால் சென்றுள்ளது. சில பகுதிகளில், போராட்டக்காரர்கள் மோட்டார் சைக்கிள்களில் சென்று வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மீது கற்கள் மற்றும் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
மேலும், நேற்றைய தினம் பல குழுக்கள் திட்டமிடப்பட்ட வகையில் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை, போராட்டங்களுக்காக வீட்டை விட்டு சென்றிருக்கும் மக்களின் வீடுகள் திருடர்களால் உடைக்கப்பட்ட சந்தர்ப்பங்களும் உள்ளன என்பதை நான் நினைவு படுத்த விரும்புகிறேன். பொதுமக்களைப் பாதுகாப்பதில் எப்பொழுதும் அர்ப்பணிப்புடன் செயற்படும் பாதுகாப்பு அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு, முப்படைகள் மற்றும் பொலிஸார், இந்த போராட்டங்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
ஜனநாயக ரீதியில் நடைபெறும் அமைதியான போராட்டங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், வன்முறைச் செயல்கள் தடுக்க நடவடிக்கை எடுப்போம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், அமைதியை நிலைநாட்ட பாதுகாப்புப் படையினர் செயல்படும் அதேவேளை வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த தயங்க மாட்டார்கள் என்றும் நான் மேலும் வலியுறுத்துகிறேன்.
நாட்டு மக்கள் தேவைப்பட்டால் தங்கள் ஜனநாயக உரிமையாக அமைதியான முறையில் போராட்டங்களை நடத்துமாறும் பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல், தீவைத்தல் போன்ற செயல்களில் ஈடுபடாமல் இருக்குமாறும் பாதுகாப்புச் செயலாளர் என்ற வகையில் இறுதியாக வேண்டுகோள் விடுக்கின்றேன். மேலும், பல்வேறு நோக்கங்களுக்காக வன்முறையைத் தூண்டுபவர்களிடம் ஏமாறாது இருக்குமாறும் வேண்டுகின்றேன். இறுதியாக, உங்கள் அனைவருக்கும் அமைதியான மற்றும் மகிழ்ச்சியான நாளை வேண்டி வாழ்த்துகிறேன்.