பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் வெற்றிடம்- பாராளுமன்ற செயலாளர் நாயகம்

பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியாகப் பதவியேற்றிருப்பதால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.

இந்நாட்டின் ஜனாதிபதிப் பதவியை ஏற்றுக் கொண்டிருப்பதாகவும், இதனால் 2022 யூலை 21 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்வதாகவும் கௌரவ ரணில் விக்ரமசிங்க கடிதம் மூலம் தனக்கு அறிவித்திருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 66 (இ) உறுப்புரையின் பிரகாரம் ஒன்பதாவது பாராளுமன்றத்தில், உறுப்பாண்மையில் வெற்றிடமொன்று ஏற்பட்டுள்ளதனால் 1988ஆம் ஆண்டின் 35ஆம் இலக்க பாராளுமன்ற தேர்தல்கள் (சிறப்பேற்பாடுகள்) சட்டத்தினால் திருத்தப்பட்டவாறான 1981ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 64(5) பிரிவின் கீழ் பாராளுமன்ற செயலாளர் நாயகம், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவித்துள்ளார்.

Spread the love