நாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள தென்மேற்கு பருவமழை மே 18 முதல் தீவிரமடைந்துள்ள நிலையில், தற்போதைய சீரற்ற காலநிலை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை நீடிக்கக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்தார்.
இதனால் காலை அல்லது இரவு வேளைகளில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என்றும் அவர் கூறினார். தற்போது நிலவும் காலநிலை மற்றும் அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகள் குறித்து அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (2) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் இவ்வாறு தெரிவித்தார்.
அண்மையில் பெய்த மழையுடன் ஒப்பிடும் போது வழமையான மழை வீழ்ச்சியின் அளவு குறைந்துள்ளது என்றும் பணிப்பாளர் நாயகம் கூறினார். வடக்கு, வடமத்திய, வடமேற்கு, திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் குறிப்பாக மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் காற்றானது மணிக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.
எதிர்வரும் ஜூன் மாதம் 6 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் மழைவீழ்ச்சி குறைவானதும் அதிகரித்ததாகவும் காணப்படும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.
பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு 03.06.2022