இந்திய-ரஸ்ய கூட்டுத் தயாரிப்பான பிரமோஸ் ஏவுகணைக்கான 375 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தத்தில் பிலிப்பைன்ஸ் கையெழுத்திட்டுள்ளது.
பிஏபிஎல் நிறுவனத்திற்கும் பிலிப்பைன்ஸ் பாதுகாப்புத் துறைக்கும் இடையே வெள்ளிக்கிழமை இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. பிரமோஸ் தலைமை நிர்வாக அதிகாரி அதுல் டி. ராணே, துணை தலைமை செயல் அதிகாரி சஞ்சீவ் ஜோஷி, லெப்டினன்ட் கர்னல் ஆர். நேகி மற்றும் பிரவீன் பதக் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பிரமோஸ் ஏவுகணைக்கான முதல் வெளிநாட்டு விற்பனை ஒப்பந்தம் இதுவாகும். கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி பிலிப்பைன்ஸின் பாதுகாப்பு அமைச்சர் டெல்பின் லோரென்சானா வெளியிட்ட ஓர் அறிவிப்பின் மூலம் பிரமோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தம் குறித்த தகவல் வெளி உலகத்துக்கு தெரியவந்தது.
பிரமோஸ் என்பது ஒரு மீயொலிவேக, சிறு இறக்கையுடன் கூடிய, குறைந்த உயரத்தில் பறக்கவல்ல ஒரு வழிகாட்டப்பட்ட ஏவுகணையாகும். இது நீர்மூழ்கிக் கப்பல், போர்க் கப்பல், போர் விமானம் மற்றும் தரை போன்ற பல விதமான வழி முறைகளில் இருந்து ஏவப்படக்கூடியது. இது இந்தியாவின் (DRDO) எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பினதும் ரஷ்யாவின் என் பி ஓ மஷிநோஸ்ட்ரோஏணியா நிறுவனத்தின் கூட்டுத் தயாரிப்பாகும்
இந்த பிரமோஸ் எனும் பெயர் பிரம்மபுத்திரா மற்றும் மாஸ்க்வா என்ற நதிகளின் பெயர்களின் சுருக்கமாகும். இந்த ஏவுகணை மக் 2.5-2.8 வேகத்தில் செல்லக்கூடிய ஆற்றல் கொண்டது.