உலக புகழ்பெற்ற அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று ஆரம்பமானது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் ஆட்சியர் தொடங்கி வைத்தனர். வீரர்கள் உறுதிமொழி ஏற்று ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்டனர். 700 காளைகள் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் களமிறங்கியுள்ளன. 300 மாடுபிடி வீரர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ளனர். களமிறங்கும் காளைகள் மற்றும் வீரர்களுக்கு தலா ஒரு தங்கக்காசு பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் தேர்வு செய்யப்படும் சிறந்த காளைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் கார் வழங்கப்படவுள்ளது.
அதேபோல் சிறந்த மாடு பிடி வீரருக்கு எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் சார்பில் கார் பரிசளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 ஆயிரத்திற்கும் குறையாமல் ஒவ்வொரு காளைக்கும் பரிசுகள் வழங்கப்பட இருப்பதாக ஜல்லிக்கட்டு விழா கமிட்டிக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட உள்ளன. பாதுகாப்பு பணியில் ஆயிரத்து 500 இற்கும் மேற்பட்ட பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.