தற்போதுள்ள பொருளாதார மற்றும் பூகோள நெருக்கடிகளுக்கு மத்தியில் பாரிய சவாலை எதிர்கொள்ளும் நிலைமை இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ளதாக தமிழ், சிங்கள புதுவருடம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வௌியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சவாலை ஒற்றுமை மற்றும் சரியான புரிதலுடன் வெற்றிகொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சவாலுக்கு மத்தியில் பல்வேறு அசௌகரியங்களை பொதுமக்கள் எதிர்நோக்கி வருவதாகவும், குழப்பநிலையில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய கடினமான காலத்தை கடப்பதற்கு, ஒரே தேசமாக அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என தமிழ் சிங்கள புதுவருடம் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ வௌியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவால் மிக்க காலகட்டத்தில் எதிர்பாராத விதமாக அனைவரும் எதிர்நோக்கியுள்ள துன்பத்தை போக்குவதற்கான எதிர்கால திட்டங்களை அரசாங்கம் ஏற்கனவே செயற்படுத்தியுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
தன்னிறைவு பெற்ற பொருளாதாரமாக இருந்த நாடு, தற்போது கண்ணீரின் சொர்க்கமாக மாறியுள்ளதுடன், புத்தாண்டை நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் கொண்டாடும் வாய்ப்பை நாட்டு மக்கள் ஒட்டுமொத்தமாக இழந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச புத்தாண்டு செய்தியில் தெரிவித்துள்ளார்.தியாகங்களை செய்த மக்களை மீண்டும் தியாகம் செய்யச் சொல்வதை விட, நடைமுறையில் இந்த தருணத்தில் ஆட்சியாளர்கள் அதை செய்வது கட்டாயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்பொழுது நாம் மாத்திரமன்றி உலக மக்கள் அனைவரும் கடினமான பொருளாதார மற்றும் சமூக சவால்களை எதிர்கொண்டுள்ள போதிலும் நவீன தலைமுறையினருக்கு பழமையான, தேசிய கலாசாரத்தின் அடிப்படைகளை கடத்துவதற்குள்ள இதுபோன்ற தனித்துவமான சந்தர்ப்பங்களைத் தவறவிடக்கூடாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஒரே இலங்கையர் என்ற இனமாக ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலமே எமக்கு முன்னால் உள்ள அனைத்து சவால்களையும் வெற்றிகொள்ள முடியும் எனவும் அவர் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.