அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐ.பி.எல் தொடருக்கான மெகா ஏலம் எதிர்வரும் பெப்ரவரி 7 மற்றும் 8 ஆகிய திகதிகளில் நடத்த திட்டமிட்டிருப்பதாக பி.சி.சி.ஐயின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மொத்தம் 10 அணிகள் பங்கு பெறும் இந்த ஏலத்தை பெங்களூரில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
2022 ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் வழக்கமாக பங்கேற்கும் எட்டு அணிகளுடன், இரண்டு புதிய அணிகள் இடம்பெறுகின்றன. இதற்காக ஏற்கனவே உள்ள அணிகள். அதிகபட்சமாக 4 வீரர்களை மட்டும் தக்கவைத்துக் கொண்டு மற்ற வீரர்களை விடுவித்துள்ளன. இரண்டு புதிய அணிகளும் ஏலத்திற்கு முன்பாகவே 3 வீரர்களை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் என பி.சி.சி.ஐ. தெரிவித்தது.
இருப்பினும் மெகா ஏலம் குறித்து பெரும்பாலான அணி உரிமையாளர்கள் அதிருப்தியை தெரிவித்துள்ளனர். ஒரு அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு ஒன்றாக இணைந்து விளையாடவே சில ஆண்டுகள் ஆகும். மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை அணி முழுவதையும் கலைத்து மெகா ஏலம் நடத்துவது அணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்தனர்.