பெயர் மாற்றப்பட்டு உரமோசடி -கிளிநொச்சி அரசாங்க அதிபர் தலைமையில் குழு கூட்டம்

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது மக்னீசியம் சல்பேற்”(MAGNESIUM SULPHATE HEPTAHYDRATE) என்ற உரத்தை அமோனியம் சல்பேற் என சிலர் ஏமாற்றி விற்பனை செய்கின்றனர்.
பயிர்களுக்கும் பயிர் நிலங்களுக்கும் பாதிப்பினை ஏற்படுத்தக்கூடிய இவ் உரத்தை விவசாயிகள் கொள்வனவு செய்து பயன்படுத்துகின்றனர்.

நேற்று (27) நடைபெற்ற கிளிநொச்சி மாவட்டத்தின் மாவட்ட குழு கூட்டத்தின் போதே இது தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டது. மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் தலைமையில் இக் கூட்டம் நடைபெற்றது. தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற இரசாயன உரத் தட்டுப்பாடு காரணமாக விவசாயிகள் பல்வேறு வகையான உரங்களை மிகக்கூடிய விலைகளில் பெற்று பயிர்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

இது தொடர்பில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அமைப்புகளால் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து கமநல சேவை நிலையங்கள் ஊடாகவும் விவசாய திணைக்களத்தின் ஊடாகவும் விவசாயிகளுக்கு அறிவிப்புகளை வழங்குவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தீர்மானமும் எடுக்கப்பட்டது. ஏற்கனவே நடைபெற்ற மாவட்ட விவசாய குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்ற மீளாய்வு தொடர்பிலும் சட்ட ரீதியற்ற பயிர் செய்கைகளை கட்டுப்படுத்துவது தொடர்பிலும் இதன்போது மேலும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Spread the love