மூன்றிலிரண்டு பெரும்பான்மை முழுபலத்துடன் இருந்த ராஜபக்ச அரசாங்கத்தின் சாதாரண பெரும் பான்மையே கேள்விக்குறியாகியுள்ளது. ராஜபக்ச கூட்டிலிருந்த 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாகச் செயற்படவுள்ளதால் எந்தவொரு தரப்புக்கும் நாடாளுமன்றப் பெரும்பான்மை கிட்டவில்லை. இதனால் நாடாளுமன்றம் அதன் உறுதிப்பாட்டை இழந்துள்ளது.
பெரும் பரபரப்புக்கு மத்தியில் நாடாளுமன்றம் நேற்று முற்பகல் 10மணிக்கு கூடியது. இதன்போது சுயாதீனமாகச் செயற்படவுள்ளதாக சிறிலங்கா பொதுஜனபெரமுனவின் 43 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிவித்தனர். அவர்களில் மூவர் பின்னர் பல்டி அடித்தனர். இதனால் 40 பேர் மாத்திரமே சுயாதீனமாக இயங்கவுள்ளனர். இதேவேளை, கடந்த காலங்களில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கு எதிரணியிலிருந்து ஆதரவளித்த சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் எந்தவொரு நிலைப்பாட்டையும் அறிவிக்கவில்லை. இதனால் ராஜபக்ச அரசின் சாதாரண பெரும்பான்மை பலமான 113 என்பது ஊசல் நிலையிலேயே உள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு இடம் பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுன கூட்டணிக்கு தேசியப் பட்டியல் ஆசனங்கள் உள்ளடங்கலாக 145 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றன. பங்காளிக் கட்சிகளின் ஆதரவுடனும், எதிர்த்தரப்பிலிருந்து கட்சி தாவியோரின் ஆதரவுடனும் 159 ஆசனங்கள் என்ற நிலைமையை எட்டியது. மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்துடன் ராஜபக்ச அரசாங்கம் இதுவரை இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்றைய தினம் 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது ஆதரவை அரசுக்கு வழங்குவதிலிருந்து விலக்கிக்கொண்டுள்ளனர். ‘அவர்கள் எதிரணியுடனும் சேராமல் சுயாதீனமாக இயங்கவுள்ளனர். தற்போது ராஜபக்ச 119 என்ற நிலையில் ‘இருந்தாலும்கூட அவர்களில் எதிரணியிலிருந்து இதுவரை ஆதரவு வழங்கிய 9 பேர் எந்த நிலைப்பாட்டை எடுப்பார்கள் என்பது தெரியவரவில்லை. இதனால் நாடாளுமன்றத்தில் எந்தவொரு தரப்புக்கும் பெரும்பான்மை இல்லாது போகும் நிலைமை தோன்றியுள்ளது.