இலங்கை மக்களை பாதுகாப்பதற்கும் பொருளாதாரத்தை மீட்பதற்குமான முக்கிய சீர்திருத்தங்களை செயற்படுத்த தாம் தொடர்ந்தும் ஆதரவளிப்போம் என உலக வங்கி தெரிவித்துள்ளது.
அதேவேளை இலங்கைக்கான கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையின் முன்னேற்றத்தை வரவேற்பதாகவும் அதற்காக தாம் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குவோம் என்றும் உலக வங்கி அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை உலக வங்கியின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பதிவிலேயே வங்கியின் பிரதி தலைவர் மார்ட்டின் ரைசர் பதிவிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கை கடன் நெருக்கடியிலிருந்து விடுபட உதவுவதில் சீனா சாதகமான பங்கை வகிப்பதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது
கடன் மறுசீரமைப்புக்காக எழுத்து மூல உத்தரவு வழங்கப்பட்ட பின்னர் சீனா இந்த அறிவிப்பை விடுத்துள்ளது. இலங்கையின் தற்போதைய சவால்களை சமாளிக்கவும், கடன் சுமையை எளிதாக்கவும், நிலையான வளர்ச்சியை அடையவும் உதவுவதில் சாதகமான பங்கை வகிக்க, தொடர்புடைய நாடுகள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக உள்ளதாகவும் சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கை தரப்புடன் கடனை அகற்றும் திட்டங்களை விரிவாக விவாதிப்பதுடன் தொடர்புடைய நிதி நிறுவனங்களுக்கு சீனா, ஆதரவளிபபதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.