பொருளாதார நெருக்கடி குறித்து அமெரிக்க தூதுக்குழு, ஜனாதிபதியிடையே கலந்துரையாடல்

அமெரிக்க உயர்மட்டத் தூதுக்குழுவினர் நேற்று திங்கட்கிழமை ஜனாதிபதி கோத்தபாய ராஜாபக்சவை சந்தித்து, முன்னொருபோதும் இல்லாத பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கான கடுமையான பற்றாக்குறையை சமாளிக்க உதவும் நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடியுள்ளனர் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதி உதவிச் செயலாளரும் அமெரிக்கத் தூதுவருமான கெல்லி கெய்டர்லிங், அமெரிக்கத் திறைசேரியின் பிரதி உதவிச் செயலர் ரொபோட் கப்ரோத் இலங்கைக்கான தூதுவர். ஜூலி ஜே சுங் ஆகியோர் ஜனாதிபதியைச் சந்தித்து இலங்கையின் பொருளாதார நெருக்கடி குறித்து கலந்துரையாடினர்.

இது ஒரு சவாலான தருணம் ஆனால் இலங்கைக்கு வளமான, பாதுகாப்பான மற்றும் ஜனநாயக எதிர்காலத்தை அடைய உதவும் வகையில் நாங்கள் தொடர்ந்து உதவி மற்றும் நீண்ட கால பங்காளித்துவத்தை வழங்குகிறோம் என்று அமெரிக்க தூதுவர் ருவீட் செய்துள்ளார். எரிபொருளை நேரடியாகக் கொள்வனவு செய்வதற்கும் ஏனைய இராஐதந்திர விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கும் இரண்டு அமைச்சர்கள் திங்கட்கிழமை ரஷ்யாவிற்குச் செல்லவுள்ளதாக மின்சார மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கூறியிருந்த நிலையில் ஜனாதிபதியுடனான அமெரிக்கக் குழுவின் சந்திப்பு இடம்பெற்றது.

நான்கு நாள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டு ஞாயிற்றுக்கிழமை கொழும்புக்கு வருகைதந்த அமெரிக்க திறைசேரி மற்றும் வெளியுறவத்துறை உயர் அதிகாரிகள், பலதரப்பட்ட அரசியல் பிரதிநிதிகள், பொருளாதார நிபுணர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளைச் சந்தித்து தேவையோடுள்ள இலங்கையர்களுக்கு தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண உழைக்கும் மற்றும் எதிர்காலத்திற்கான நிலையான மற்றும் உள்ளடக்கிய பொருளாதாரத்திற்கு திட்டமிடும் இலங்கையர்களுக்கு ஆதரவளிக்க அமெரிக்காவிற்கு மிகவும் பயனுள்ள வழிகளை ஆராய்வார்கள் என அமெரிக்க தூதரகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு வாரங்களில், இலங்கையின் சிறு மற்றும் நடுத்தர வர்த்தகங்களுக்கு 120 மில்லியன் அமெரிக்க டொலர் புதிய நிதியுதவியையும், இலங்கையின் பால் உற்பத்தித் தொழிலுக்கு 27 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பங்களிப்பையும், கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக 5.75 மில்லியன் அமெரிக்க டொலர் மனிதாபிமான உதவிகளையும் அமெரிக்கா அறிவித்துள்ளது. பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு வாழ்வாதார உதவி மற்றும் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த உதவும் நிதி மறுசீரமைப்புக்கான தொழில்நுட்ப உதவிகளை வழங்க அமெரிக்கா 6 மில்லியன் அமெரிக்க டொலர்களை புதிய மானியமாக வழங்கியுள்ளது நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கை, அந்நிய செலாவணி பற்றாக்குறையால் முன்னொரு போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருப்பதற்கு மத்தியில் குறைந்து வரும் எரிபொருள் கையிருப்புக்களை நிரப்ப தீவிரமாக எதிர்பார்த்து வரும் நிலையில், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதற்கான விருப்பங்களை ஆராய்ந்து வருகிறது.

Spread the love