போரை உடனடியாக நிறுத்து ..! சர்வதேச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ரஷ்யா தங்கள் நாட்டின் மீது இனப்படுகொலை நடத்தி வருவதாக உக்ரைன் நாடானது வழக்கு தொடர்ந்திருந்த நிலையில் “உக்ரைன் மீதான போரை உடனடியாக நிறுத்த வேண்டும்” என்று ரஷ்யாவுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

உக்ரைனின் மிக முக்கியமான நகரங்களிலுள்ள மருத்துவமனை, மக்கள் குடியிருப்புகள் மீது ரஷ்யா தொடர்ந்தும் கடும் தாக்குதல்களை நடத்திவருகிறது. அதில் வான்வழி தாக்குதல் காரணமாக, பல கட்டிடங்கள் உருக்குலைந்தன. உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் தாக்குதல்கள் நாள்தோறும் மிகத் தீவிரமானவையாக காணப்படுகின்றன. ரஷ்யாவானது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி உக்ரைனை சுற்றி வளைத்துள்ளது, அடுத்தபடியாக தற்போது தலைநகர் கீவை படையினர் நெருங்கியுள்ளனர்.

இதன் காரணமாக, கியேவின் புறநகர்ப் பகுதியில் சண்டை கடுமையாகியுள்ளது. தலைநகரைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் பீரங்கித்தாக்குதல்கள் இடைவிடாது தொடரும் நிலையில், மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் தஞ்சம் கோரி வருகின்றனர். மேலும் பலர் பதுங்கு குழிகளில் பாதுக்காப்புக்காக தங்கியுள்ளனர். ரஷ்யாவின் இந்த கொடும் செயலுக்கு உலக நாடுகள் தமது கடும் கண்டனத்தையும் எதிர்ப்பினையும் தெரிவித்து வருகின்றன.

இப்படியான வேளையில் ரஷ்ய படைகளை உக்ரைனை விட்டு வெளியேற்றக்கோரி உக்ரைனானது சர்வதேச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனு மீதான விசாரணை சர்வதேச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தவேளை அந்த மனு மீதான விசாரணையை ரஷ்யா ஒரு பொருட்டாக மதிக்காமல் புறக்கணித்திருந்தது.

உக்ரைன் பிரதிநிதி அன்டன் கோரினெவிச் பங்கேற்று தனது கருத்தை முன்வைத்து வாதாடினார். அப்போது, உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்தும்படி ரஷியாவுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் போர் என்ற பெயரில் தங்களது நாட்டுக்குள் புகுந்து ரஷிய படைகள் சட்ட விரோத தாக்குதல்களையும் மனிதாபிமானமற்ற போரினையும்  நடத்தி வருவதாக குற்றம் சுமத்தினார்.

மேலும் போர் விதிகளை மீறி அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துவதாகவும் உக்ரைன் ரஷ்யா மீது குற்றம்சாட்டியுள்ளது, இவற்றையெல்லாம் வைத்து உக்ரைன் கொடுத்த  மனு மீது சர்வதேச நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டு  இன்று தீர்ப்பு வழங்கியது அதாவது ரஷ்யாவானது உக்ரைன் மீதான போரினை உடனே நிறுத்த வேண்டும் என்கிற தீர்ப்பினை நீதி மன்றம்  வழங்கி உத்தரவிட்டது..  .

Spread the love