கட்சியின் நலனிற்காக நடுநிலை வகிக்காது பிரதேச மக்களின் நலனிற்காக வரவு செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களித்தேன் என காரைநகர் பிரதேச சபையின் முன்னணி உறுப்பினர் பரமானந்தம் தவமணி தெரிவித்தார். காரைநகர் பிரதேச சபை வரவுசெலவு திட்டம் தோற்கடிப்பு செய்யப்பட்டதனால் நான் உட்பட இருவர் உடன் அமுலுக்கு வரும்வகையில் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்குவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் க.சுகாஷ் அறிவித்துள்ளார்.
நான் ஓர் காரைநகர் பிரதேச சபை உறுப்பினர் என்னிடம் என் பிரதேச விடயத்தை கேட்டறிய வேண்டும். அதை விடுத்து வெறுமனே கட்சி நலனிற்காக முடிவை எடுத்து அறிவித்தால் மக்கள் அதனை ஏற்க மாட்டார்கள். நான் மக்கள் நலனை கேட்டேன் அதன்படியே செயல்பட்டேன். காரைநகர் பிரதேச சபையின் வரவுசெலவுத் திட்ட வாக்கெடுப்பில் நடுநிலை வகிப்பது என்பதும் அந்த வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதும் ஒரே விடயம். ஏனெனில் காரைநகர் பிரதேச சபையில் 11 உறுப்பினர்கள், எஞ்சிய 10 உறுப்பினர்களினது முடிவும் ஏற்கனவே வெளிப்பட்ட ஒன்று அதாவது கூட்டமைப்பு, சுயேட்சைக் குழு தலா 3 ஆசனங்களும், ஐ.தே.கட்சி மற்றும் ஈ.பீ.டீ.பி தலா 2 ஆசனங்களையும் கொண்டிருக்கும் நிலமையில் சுயேட்ச்சைக் குழுவிற்கு ஈ.பீ.டீ.பியும் கூட்டமைப்பிற்கு ஐ.தே.கட்சி ஆதரவளிப்பதும் கடந்த 8 ஆம் திகதி வாக்கெடுப்பின்போதே வெளிப்பட்டது.
இதன் பின்பும் என்னை நடுநிலமையாக இருக்குமாறு கூறியதன் மூலம் ஈ.பீ.டீ.பியின் கூட்டு அணி வெற்றியீட்ட வேண்டும் என்ற கபட நோக்கம் கொண்டதாக எமது பிரதேச மக்கள் கருதினர் அதனால் எனக்கு அரசியல் எதிர் காலம் இல்லாவிட்டாலும் மக்களிற்கு அரசியல் எதிர்காலம் வேண்டும் எனக் கருதி வாக்களித்தேன் என்றார்.