நாடுதழுவிய ரீதியில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், அரசாங்கம் ஊரடங்குச் சட்டத்தை அறிவிக்கும் சாத்தியம் அதிகமாக உள்ளது. ஆர்ப்பாட்டங்களைக் கட்டுப்படுத்த மாத்திரமன்றி, பாராளுமன்றில் நாளை அல்லது நாளை மறுதினம் எதிர்க்கட்சிகள் சமர்ப்பிக்கவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரனையைத் தடுக்கவும் ஊரடங்குச் சட்டம் உதவும் என்பதை ராஜபக்ச சகோதரர்கள் நன்கறிவர்.
பல இடங்களிலும் பிரதான வீதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நிகழ்வதால், கொழும்பு-காலி, கொழும்பு-அவிசாவல போன்ற முக்கிய வீதிகளில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. சில இடங்களில் மக்கள் ரயர்களை கொழுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேற்படி ஆர்ப்பாட்டங்களில் அரச கைக்கூலிகள் உள்நுழைந்து மக்கள் ஆர்ப்பாட்டத்தை வன்முறையாக மாற்ற அதிகம் சாத்தியமுள்ளது. நேற்றைய அமைச்சரவை பதவியேற்பில் ஆர்ப்பாட்டங்களை அடக்க அரசாங்கம் தலையிடும் என ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
மேலும் பிரதமர் மகிந்த ராஜபக்சவும் அண்மைக்காலமாக தனது பல உரைகளில், 88/89 ம் ஆண்டு நடந்த கலகங்கள் பற்றியும், அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் பற்றியும் அடிக்கடி குறிப்பிட்டிருந்தார் என்பதும் இங்கே கருத்தில் கொள்ளவேண்டியுள்ளது.