மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு கையொப்பமிடப் போவதில்லை- ஜனாதிபதி ரணில்

மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு கையொப்பமிடப்போவதில்லை என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சட்டமா அதிபர் ஊடாக உயர்நீதிமன்றத்துக்கு, இன்று (31) அறிவித்தார்.


போதைப் பொருள் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு குற்றவாளிகளுக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2019ஆம் ஆண்டு தீர்மானித்திருந்தார். அந்த தீர்மானத்தை இரத்து செயய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுக்கள், நீதியரசர்களான விஜித் மல்லல்கொட, எல்.டி.பி. தெஹிதெனிய மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகியோரடங்கய குழாம் முன்னிலையில், இன்று (31) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.


அதன்போது, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே, ஜனாதிபதி ரணிலின் மேற்குறிப்பிட்ட தீர்மானத்தை அறிவித்தார். இவ்விடயம் குறித்து, சட்டமா அதிபரால், ஜனாதிபதியிடம் வினவப்பட்ட போது, மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு தான் கையெழுத்திடப் போவதில்லை என்று ஜனாதிபதி தெரிவித்தாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் மன்றுக்கு அறிவித்தார்.
இது குறித்த மனுக்கள், உயர்நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் போது தனது தீர்மானத்தை அறிவிக்குமாறு, சட்டமா அதிபரிடம் ஜனாதிபதி தெரிவித்ததாகவும் மன்றில் சுட்டிக்காட்டப்பட்டது.


மரண தண்டனையை அமுல்படுத்துவதில்லை என அரசாங்கம் கொள்கை ரீதியில் தீர்மானம் எடுத்துள்ளதாகவும் அந்த தீர்மானத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே, மன்றுக்கு அறிவித்தார். இதனையடுத்து மனுக்களை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான சந்தர்ப்பம் உள்ளதா என்பது குறித்து அடுத்த அமர்வில் அறிவிக்குமாறு மனுதாரர்களுக்கு அறிவித்த நீதியரசர் விஜித் மலல்கொட, மனு மீதான பரிசீலனைக்கான தினமாக பெப்ரவரி 23ஆம் திகதியை நிர்ணயித்தார்.

Spread the love