மரியுபோலில் மிகப்பெரிய போர்க்குற்றம் நிகழ்கிறது: ஐரோப்பிய ஒன்றியம் குற்றச்சாட்டு

உக்ரைன் நாட்டு மரியுபோலில் மிகப்பெரிய போர்க் குற்றம் நடைபெறுவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கை பிரிவின் தலைவர் ஜோசப் போரெல் தெரிவித்துள்ளார்.

ரஷ்யப் படையினர் உக்ரைனின் துறைமுக நகரான மரியுபோல் மீது மூர்க்கத்தனமாகக் குண்டுவீசி எல்லாவற்றையும் அழித்தொழித்து பொதுமக்களைக் கொலை செய்தும் வருவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ரஷ்யா மீது இன்னும் அதிகமான கூடுதல் பொருளாதாரத் தடைகளை எவ்விதம் விதிப்பது என்பது குறித்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளினுடனான ஒன்று கூடலானது பிரஸ்ஸல்ஸ் நகரில் வெளியுறவு துறை அமைச்சர்களின் ஒன்று கூடலாக நேற்று நிகழ்ந்தது . அங்கு அவர் இக்கூற்றினைத்தெரிவித்து நின்றார்,

இது இவ்வாறிருக்க, ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் பெரும்பாலான நாடுகள் தமது தேவைக்குரிய எரிவாயுவின் 40 சதவீத எரிவாயுவை ரஷ்யாவிடமிருந்தே பெற்றுக்கொள்கின்றன, ஆகவே ரஷ்யாவின் எண்ணெய்யை குறிவைப்பது ஐரோப்பிய ஒன்றியத்திற்குக் கடினமான தேர்வாகும்.

உக்ரைன் – ரஷ்யா இடையே போர் தொடங்கியதிலிருந்து ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின், மூத்த அமைச்சர்கள், தொழிலதிபர்கள் உட்பட 877 பேர் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது தெரிந்ததே, இதனால் புதிதாக வேறு பொருளாதார தடைகளை விதிப்பதால் ரஷ்யாவிடமிருந்து எரிவாயு கிடைக்காமல் போகும் நிலை காணப்படுகின்றமையால் ரஷ்யா மீது மேலதிகமான பொருளாதாரத் தடைகளை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் தயங்கிவருகிறது. இருப்பினும் அமெரிக்கா மற்றும் பிரித்தானியா போன்றவை ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதியை முற்றிலும் தடை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love