தற்போது, மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருவதனால், கல்வி அமைச்சு அது தொடர்பான உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜந்த தலைமையில், கல்வி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் உரிய நிறுவனங்களின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது.
இதன்போது, பாடசாலைகளில், போதைப்பொருள் பரவலை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. தற்போது கல்வி அமைச்சினால் 2020.07.29 ஆம் திகதி (20/2020 இலக்க) வெளியிடப்பட்டுள்ள ‘கல்வி நிறுவன வளாகங்களில் புகையிலையுடன் தொடர்புடைய உற்பத்திகள், மது மற்றும் போதைப்பொருள் பாவனை, விளம்பரம் மற்றும் வியாபாரம் இல்லாத பகுதியாக மாற்றுதல்’ என்ற சுற்றறிக்கையில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதை மீண்டும் பாடசாலை அதிபர்களுக்கு வலியுறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் பாடசாலை, வலய மற்றும் மாகாண மட்டத்தில் போதைப்பொருள் நிவாரணக் குழுக்களை நியமித்து உரிய நடைமுறையில் பாடசாலை வளாகங்களில் இருந்து போதைப்பொருள் பாவனையை ஒழிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பது குறித்து ஆலோசனை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது.
ஏதிர்காலத்தில் பாடசாலைகளுக்குள் வருபவர்கள் மற்றும் மாணவர்களின் புத்தகப்பை என்பவற்றை பரிசீலிக்க வேண்டுமாயின், ஆசிரியர்கள், மாணவ தலைவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் போன்றோரால் இந்த செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட் வேண்டும் என்றும் அங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் பாவனையாளர்களை இனங்காணல் மற்றும் அவர்கள் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆசிரியர்களுக்கு விசேட விழிப்புணர்வு நிகழ்it நடாத்துவதுடன், பாடசாலை சூழலை மாணவர்கள் விரும்பக் கூடிய வகையில் சிறப்பான சூழலாக முன்னெடுப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.